தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி அறிந்த பிரபல ஹாலிவுட் நடிகரான டைட்டானிக் பட ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ, நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை நம்மால்தான் மாற்ற முடியும் என்று என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், அண்டை மாநிலங்கள் தண்ணீர் மறுப்பதாலும் சென்னை உள்பட பல மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம் பாக்கம், புழல் ஏறிகள் முற்றிலும் வரண்டு போய்விட்ட நிலையில், சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்தும், கல்குவாரிகளிலும் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறத.
இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை உலகம் முழுவதும் எதிரொலித்துள்ள நிலையில், பல வெளிநாடு ஊடகங்களிலும் தமிழக மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலம் வெளியாகி உள்ளது. இதைக்கண்ட பிரபல ஹாலிவுட் நடிகரான டைட்டானிக் புகழ் லியானர்டோ டி காப்ரியோ, தனது இன்ஸ்டாகிராமில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்த படத்தை வெளியிட்டு தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
அதில், “தற்போது இருக்கும் நிலையில் இருந்து சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். புகைப்படத்தில் உள்ள கிணறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது. நகரம் தண்ணீரில்லா மல் உள்ளது. நான்கு ஏரிகள் வறண்டு போன பிறகு, இந்திய நாட்டின் தென்னிந்திய நகரமான சென்னை சிக்கலில் உள்ளது.
குடிநீருக்காக மக்கள் காலிக் குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். தண்ணீர் பிரச்னை காரணமாக ஹோட்டல்கள் மூடப்படுகின்றன. இந்தப் பிரச்னையை சரி செய்ய அரசு அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் சென்னை மக்கள் மழைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
தனது அடுத்த பதிவில், நம்மால் தான் இந்த உலகை மாற்ற முடியும் என்றும் டி காப்ரியோ தெரிவித்துள்ளார்.