பெங்களூரு:
பிரபல நடிகர் கிரிஷ் கர்நாட் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 81. கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கன்னட மொழி எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், சிறந்த நடிகர், தியேட்டர் கலைஞர், கதாசிரியர்,, என பன்முகத் தன்மை கொண்டிருந்த இலக்கியவாதி கிரிஷ் கர்னாட் உடல் நலக்குறைவால் இன்று காலை பெங்களூருவில் மறைந்தார். பெங்களூருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட், வீட்டில் உயிர் பிரிந்தது
தாய் மொழி கொங்கனி என்றாலும் கன்னடத்தை தாய்மொழியாக தேர்ந்தெடுத்துக் கொண்ட கிரிஷ் கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்வேறு நாடகங்களை எழுதி இயக்கி வந்தவர் கிரிஷ். இப்ராகிம் அல்காசி, பீ. வீ. கரந்த், அலிகியூ படம்சே, பிரசன்னா, அரவிந்த் கவூர், சத்யதேவ் துபே, விஜயா மேத்தா, ஷியாமானந்த் ஜலன் மற்றும் அமல் அலானா போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் அவரது நாடகங்கள் இயக்கப்பட்டன.
ஒரு நடிகராக, இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் புகழ் பெற்றவர். இதன் மூலம் விருதுகள் பல பெற்றவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி, இந்திய அரசு அவரை கவுரவித்துள்ளது.
நாடக மேடை, இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், திரைப்பட நடிகராகவே அவரை உலகம் வெகு எளிதில் அடையாளம் கண்டுகொண்டது. தமிழிலும் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்தர, வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.
1938-ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்த கிரிஷ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அங்கு அவர் முதல் முதலில் (1961) எழுதிய ‘யாயாதி’ என்ற நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல நாடகங்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். கன்னட இலக்கியத்தில் இவர் எழுதியவற்றை ஆங்கிலம் மற்றும் சில இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
81 வயதான கிரிஷ் கர்னாட், இலக்கியத்தின் மிக உயர்வான கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு பேரில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு இலக்கிய உலகைச் சேர்ந்தவர்கள், நடிகர்கள் திரையுலக முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.