சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள் போன்றவற்றை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளன. மேலும், மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகள் மும்முரம் அடைந்தது. திமுக சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. அப்போது, திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியிருந்தார். இந்த குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது.
இந்j நிலையில் தேர்தல் அறிக்கை தொடர்பாக, பொதுமக்கள், வணிகர், அரசு ஊழியர், விவசாயிகள் கருத்துகளை பரிந்துரைக்கும் வகையில் பிரத்யேக செயலி, வலைதளங்களை திமுக தலைமை உருவாக்கி உள்ளது. இதை இன்று இன்று பகல் 11.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ் அப் எண், சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த செயலியில், பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஜனவரி 9ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்ட பின்னர், இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்கும். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரிபார்ப்பு ஒப்புதல் வழங்குவார். அதன் பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]