சிறப்புக்கட்டுரை:  ஏழுமலை வெங்கடேசன்

மிழ்சினிமாவின் ஆரம்பகால புள்ளிகளோடு கைகோர்த்து வளர்ந்து, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தாக்குப்பிடித்து சாதனையாளாராக திகழ்வது என்பது மிகச்சிலருக்கு மட்டுமே கிடைத்த வரம்.

1940களில் தொடங்கி 1990கள் இறுதிகள் வரை 60 ஆண்டு காலம் இசைமழையாய் பொழிந்தவர் கிருஷ்ணன்கோவில் வெங்கடாச்சலம் மகாதேவன் என்கிற கே.வி.மகாதேவன்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாதஸ்வர வித்துவானின் வித்து என்பதால் ரத்தத்தில் இசை ஊறிப்போயி ருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.  நடிப்புமேல் ஈர்ப்பு ஏற்பட்டு நாடகங்களில் சிறியவயதில் நடித்தாலும் இசை என்கிற மனப்புயல் நடிப்பை தூரப்போகவே செய்துவிட்டது.

கேவிஎம் திரைஇசையில் நுழைந்த 1930கள் காலகட்டம், மிகவும் வித்தியாசமானது. சமஸ்கிருதம், சாஸ்த்திரிய சங்கீதம் ஆகிய இரண்டு விஷயங்கள் தமிழ்சினிமாவின் பாடல்களை ஆக்கிரமித்திருந்த காலம். தமிழிசை மற்றும் மேல்நாட்டு இசையெல்லாம் எட்டியிருந்த நேரம்.

பாபநாசம் சிவன்போன்றோர் பாடல்களை எழுத அதை திரைக்கு பாட தியாகராஜ பாகவதர், பியுசின்னப்பா மட்டுமின்றி எம்எஸ்சுப்புலட்சுமி, தண்டபாணி தேசிகர், கே.பி.சுந்தராம்பாள், டி,ஆர், மகாலிங்கம் போன்றோருக்கு மட்டுமே வாய்ப்பு. இவர்களுக்கு இசையமைப்பது என்றால் கர்நாடக சங்கீதத்தில் மேதைத்தனம் இல்லாவிட்டால் எப்படி காலம் தள்ளமுடியும்?

அப்படிப்பட்ட காலத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி படிப்படி யாக வளர்ந்து, ஒரு குடிகார ஜமீன்தாரரின் காதல் பற்றி பேசிய வசந்த மாளிகை என்கிற மெகா ஹிட் படத்திற்கு அவ்வளவு வித்தியாச மாக மேற்கத்திய பாணியில் பாடல்களை கொடுக்க முடிந்ததென்றால் அவர் எப்பேர்பட்ட ஜாம்பவனாக இருக்கவேண்டும்.

1942ல் நாதா, நாதன் காலத்தில் இசையமைத்த கேவிஎம், 1972,ல், குடி மகனே பெருங்குடி மகனே, ஒரு கின்னத்தை ஏந்துகிறேன்.. என முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியிலும், மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணிமாளிகைதான் கண்ணே என கிளாசிக்காவும், யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை.. என பாமர ரசிகர்களை பரிதாபத்தில் உருகவைக்கிறமாதிரி விதவிதமான பாடல்களை ஒரே படத்தில் கொடுக்கமுடிந்தது என்பது சாதாரண விஷயமா?

பொதுவாக சினிமா இசையமைப்பார்கள் ஹிட் பாடலை கொடுத்தால் ஆஹா செமையாக இருக்கு என்று சொல்லி விட்டு திரும்பத்திரும்ப பாடலை கேட்பார்கள். ஆனால் கேவிஎம் இசையமைத்தால் அவர் அந்த பாட்டில் ராகத்தை கையாண்ட விதத்தை சொல்லி சிலாகிப்பார்கள்.

பல ஆண்டுகள் ஹீரோவாக நடித்தாலும் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு முதன் முதலில் மாஸ் ஹிட்டாக அமைந்தபாடல் 1957ல் முதலாளி படத்தில் இடம்பெற்ற, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே..பாடல். அந்த காலத்தில் ஆரபி ராகத்தை கேவிஎம் பயன்படுத்தி இந்த பாடலை அமைத்தவிதத்தைப்பற்றி சிலாகித்து பேசுவார்கள்.

கேவிஎம்மிடம் ஆழமாக பார்த்தால் அவரிடம் ஒரு அற்புதமான திறமை இருக்கும். கர்நாடக சங்கீதத்தில் பாடலை தோய்த்தெடுத்தாலும் சினிமாவுக்கே உண்டனா டச்சிங்கை வேண்டிய இடத்தில் நிறுத்திக்கொடுத்து ரசிகனை துள்ளாட்டம் போடவைத்துவிடுவார்.

மோகனாம்பாளின் பாதங்களும் ஷண்முக சுந்தரத்தின் நாபிக்கமலமும் சாகசம் படைத்த தில்லானா மோகனாம்பாள் படத்தில், ஷண்முகப்ரியா ராகத்தில் கேவிஎம் உருவாக்கிய, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல்…

இசைஞானம் உள்ள நாட்டியப்பெண்மணி நவரசங்களை நோக்கி பாடிக்கொண்டே வந்து, சரணத்திலே ஒரு இடத்தில், ‘’மோகத்திலே என்னை மூழ்க வைத்து’’  என்று வரும்போது அக்மார்க் காதலியாக மாறிவிடுவார். நாட்டியத்தை அங்கே காதல் பின்னோக்கி ஓடவைத்துவிடும். மேற்கொண்டு, ‘’ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்’’ என்று வரும்போது காதலி குறும்புக்காரியாகவே உருமாறிவிடுவாள். திரைக்கான இசையை தெளிக்கா மல் இங்கெல்லாம் சாஸ்த்திரிய சங்கீத்தை அப்பட்டமாக பயன்படுத்தியிருந்தால், பாடலே மொக்கையாகிப் போயிருக்கும்.

இதே பத்மினியின் பாதங்களை திருவருட்செல்வர் படத்தில் மன்னவன் வந்தானடி தோழி என்கிற பாடலை வைத்த கேவிஎம் இசை சோதித்த விதத்தை திரையில் மீண்டும் ஒரு முறை பார்த்தால் புரியவரும்.

இறங்கவேண்டிய இடத்தில் இறங்கி அடிக்கத்தெரிந்ததால்தான் கே.வி.மகாதேவனை திரை இசைத்திலகம் என்று அழைத்தார்கள்.

அதே ஷண்முகப்பிரியா ராகத்தை அதே கேவிஎம்தான் திருவிளையாடல் படத்தில கர்நாடக சங்கீதத்தில்முழுக்க முழுக்க தோய்த்து, ‘’ பழம் நீயப்பா, ஞானப்பழம் நீயப்பா தமிழ்ஞான பழம் நீயப்பா’’ என்று போட்டார்..

பாட்டும் நானே, பாவமும் நானே….. ஒரு நாள் போதுமோ இன்றொரு நாள் போதுமா…. பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்.. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை…. யோசித்துபாருங்கள், ஒரே படத்தில் பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்.

திருவிளையாடல் படம் மட்டுமல்ல, சரஸ்வதியின் சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர் தில்லானா மோகனாம்பாள் போன்ற ஏபிநாகராஜனின் படங்களில் இப்படித்தான் கேவிஎம் துவம்சம் செய்திருப்பார்.

இயக்குர் ஏபி.நாகராஜனுக்கு ஆரம்பம் முதலே கேவிஎம்மேல் அப்படியொரு காதல். புராண, இதிகாச படங்களில் கேவிஎம்மை சேர்த்துக்கொண்டால் சுலபமாக கரையேறிவிடலாம் என்று..

ஏபிஎன்-சிவாஜி காம்பினேஷனில் குலமகள் ராதை படத்தில், கேவிஎம் கொடுத்த ஹிட் பாடல். உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைச்சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி… இசையை மழையாய் பொழிந்த அந்த பாடல் இன்றளவும் ரசிகர்களின் எவர் கிரீன் சாங். பல படங்களில் இந்த வரிகளை நகைச்சுவை, சோகம், ஏமாற்றம் போன்ற தருணங்களை விவரிப்பதற்காக கையாண்டிருக்கிறார்கள். இன்னமும் கையாள்வார்கள்.

தமிழ்திரையுலகை பொருத்தவரை, வெகுஜன இசையமைப்பாளராய் முதன் முதலில் பிரகாசித்தவர் ஜி.ராமநாதன், இரண்டாவது எஸ்எம் சுப்பையா நாயுடு. மூன்றவாது கே.வி மகாதேவன், நான்காவது விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி.

இந்த வெகுஜென இசையின் மகத்துவத்தை உணர்ந்தவர்களில் முக்கியமான கில்லாடி சின்னப்பா தேவர். எம்ஜிஆரை வைத்து 1956 முதல் 1972 வரை 16 படங்கள் தயாரித்த தேவர், அத்தனை படங்களுக்கும் கே.வி மகாதேவனை மட்டுமே இசையமைக்க வைத்தார்.

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய், காவேரி கரையிருக்கு கரை மேல பூவிருக்கு…கட்டித்தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறுபிழிந்து, மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலமா?..கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத கண்ணும் ஒரு பெண்ணா.. நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ? என எம்ஜிஆர் –தேவர் காம்பினேஷன் படங்களில் மெல்லிய டூயட்டுகளின் பட்டியல் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா, தம்பி பயலே…. போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே, ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது என்பது என்பதடா,..நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் போன்ற தத்துவப்பாடல்களை பற்றி சொல்லவேண்டியதேயில்லை.

தொழிலாளி படத்தில் மூன்றே வாத்தியங்களை வைத்து கேவிஎம் இசையத்த, ஆண்டவன் உலகத்தின் முதலாளி, அவனுக்கு நான் ஒரு தொழிலாளி என்ற பாடலை இங்கு சொல்லாமல் போகவே கூடாது.. வழக்கமாக தத்துவ பாடல் என்றால் ஓடி ஆடி துள்ளளோடு திகழும் எம்ஜிஆரை உட்கார்ந்த இடத்தில் சிலை மாதிரியே வாயசைக்க வைத்த வித்தியாசமான பாடல்.

எம்ஜிஆரும் சரி, சிவாஜியும் சரி, கே.வி மகாதேவனை எந்த அளவுக்கு பயன்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு பயன்படுத்தினார்கள்..

கூண்டுக்கிளி, அரசக்கட்டளை அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், பல்லாண்டு வாழ்க என எம்ஜிஆருக்கு எப்படியோ, அதேபோல, மக்களை பெற்ற மகராசி சம்பூர்ண ராமாயணம், படிக்காத மேதை, இருவர் உள்ளம், நவராத்திரி, உத்தமன் என பெரிய பட்டியல் உண்டு.

கண்ணன் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான், சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, கல்யாண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் மணமகளே மருமகளே வா உன் வலது காலை எடுத்துவைத்தா வா.வா…..  அடிக்கிற கைதான் அணைக்கும், சித்தாடை கட்டிக்கிட்டு.. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, தைப்பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.. கடவுள் மனிதான பிறக்கவேண்டும் அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்… இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்.. என கேவி மகாதேவன் தந்த காலத்தையும் விஞ்சி நிற்கும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் உண்டு..

சிவக்குமார் நடித்த ஏணிப்படிகள் படத்தில் பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து ஸங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன என்ற கேவிஎம் இசைப்பாடல் எழுபதுகளின் இறுதியில் ரேடியோக்களில் ஒலிக்காத நாட்களே கிடையாது. அதே படத்தின் ஏணுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு என்ற பாடலும் அதே ரகமே.

1979ல் தெலுங்கில் சங்கராபரணம் என்றொரு படம். பிரபலமில்லாத நாயகன், நாயகி, படாதபாடுபட்டு படத்தை வெளியிட்டார்கள். தியேட்டர்களில் ஈ ஓடியது..ஆனால் அதே படத்திற்கு சில நாட்களில் ரசிகர்களை மெல்ல மெல்ல திரையரங்குகளுக்கு இழுத்து வந்துபோட்டு திரும்ப திரும்ப பார்க்க வைத்தது கேவி.மகாதேவனின் இசை.

ஓம்கார நாதனு என்று தொடங்கும் பாடலும் சரி, தொறக்குநா இடு வண்டி சேவா என்ற பாடலும் சரி..கே.வி மகாதேசன் கர்நாடக சங்கீதத்தில் எப்பேர்பட்ட மேதை என்பதை உலகிற்கு மீண்டும் ஒரு முறை பறைசாற்றியது.

அரசின் விருதுகளையும் வசூலையும் வாரிக்குவித்த சங்கராபரணம் படத்தில் கேவிஎம் இசை ராஜாங்கம் நடத்திய விதத்தை பற்றி இசை ஆர்வலர்களிடம் கேட்டால், மடமடவென எழுதி தனி புத்தகமே போட்டு கொடுத்து விடுவார்கள்.

சங்கராபரணத்தை இயக்கிய அதே கே.விஸ்வநாத், 1992ல் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வைத்து தெலுங்கில் ஸ்வாதிகிரணம் என்றொரு படத்தை எடுத்தார். கேவிஎம்தான் அதற்கும் இசை. அந்த படமும் இசைக்காக அரசு விருதுகளை அள்ளிவரத் தவறவில்லை. பாருங்க 1942ல் இசையமைப்பாளராக வந்தவர் 1992லும் இசைத்தாண்டவமாடுகிறார்.. என்னவொரு ஆளுமை?

எம்எஸ்விஸ்வநாதன் என்ற சிறுவனை கோரசில் பாட வாய்ப்பு கொடுத்து பின்னாளில் இசையமைப்பாளராக உருவெடுக்க காரணமாக இருந்தவர்… ஜெயலலிதாவையும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தில் அடிமைப்பெண் படம் மூலம் பாடகரா தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்

தென்னிந்திய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இன்றும் மக்களின் செவிகளில் இசையருவியாய் பாய்பவர்.. ஆனால் இன்றைய திரைத்துறையினரால், இன்று 100 வது பிறந்த நாளன்றும் கண்டுகொள்ளப்படாதவர்.

தமிழ்த்திரையுலக பொற்காலத்தின் அஷ்டாவதானிகளில் ஒருவராய் திகழ்ந்து 83 வயதில் மறைந்துபோன கேவி மகாதேவன் புகழ் என்பது மறக்கப்படுவதால் மங்கிப்போகிற புகழா அது?