டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் (ED) இன்று (வியாழக்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்து விசாரணைக்கு அழைத்து வருகிறது. மத்திய பாஜக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில், அவருக்கு நெருக்கடி தரும் வகையில், விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன்களை அனுப்பி வருகிறது.
ஆனால், கெஜ்ரிவால், இதுவரை அனுப்பிய 6 சம்மன்களுக்கும் ஆஜராகாமல், தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது என வலியிறுத்தி வருகிறார். இதற்கிடையில், அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து, அவர் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தற்போது, 7-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வரும் 26-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.