தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் யானைகளை பரமாரித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் அவர்கள் வளர்த்த ரகு மற்றும் அம்மு என்ற இரண்டு யானைக் குட்டிகளும் இடம் பெற்றுள்ளது.
கன்றை ஈன்ற தாய் யானைகள் சில நேரங்களில் தான் ஈன்ற கன்றை கொல்லவோ அல்லது தன்னிடம் சேர்க்காமல் துரத்தி விடுவதோ இயற்கை.
இதுபோன்ற நேரங்களில் யானைக் கூட்டத்தில் முதிய பெண் யானைகள் அந்த குட்டியை தாயின் கண்ணில் படாமல் வளர்க்கவும் வளர்ந்த பின் தாயுடன் சேர்த்து வைக்கவும் செய்யும்.
சில சமயங்களில் காட்டு யானைக் கூட்டத்தில் இருந்தும் குட்டி யானை பிரிய நேரிடும் அது போன்ற சமயங்களில் வனவிலங்கு பராமரிப்பாளர்கள் வளர்க்க நேரிடும்.
அந்த வகையில் தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகள் கன்று ஈனும்போது அந்த கன்றுகளை பராமரித்து வருபவர்கள் பொம்மன் – பெள்ளி தம்பதி. காட்டுநாயக்கர் என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இதுவரை பல யானைகளை வளர்த்துள்ளனர்.
2019ம் ஆண்டு சத்யமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனாதையாக விடப்பட்ட யானைக் குட்டி முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொம்மன் – பெள்ளியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர் முரளீதரன் என்பவர் அப்போது வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் சத்யநாராயணண் மற்றும் சேஷசாயி ஆகியோர் 2019 அக்டோபரில் விசாரித்தனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழக அரசு சார்பில் காடுகள் முதன்மை தலைமைப் பாதுகாவலர் பதில் அளித்திருந்தார்.
அதில் தாயிடம் இருந்து பிரிந்த யானைக் குட்டியை மீண்டும் காட்டிற்குள் விட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் பலமுறை முயன்றும் அந்த குட்டியை அதன் தாயுடன் சேர்க்க முடியவில்லை என்றும் அதையும் மீறி காட்டுக்குள் விடுவது அந்த குட்டியின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த குட்டியானைக்கு அம்மு என்று பெயரிட்டு பொம்மன் – பொம்மி ஆகிய இருவர் பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குட்டி யானை நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட்டு இந்த மனு மீதான விசாரனையை 24 அக்டோபர் 2019ல் முடித்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் பராமரிப்பில் வளர்த்து வந்த பொம்மன் – பெள்ளி இன்று உலகளவில் பிரபலமடைந்திருக்கினறனர்.
அம்மு தங்களிடம் வருவதற்கு முன்பே ரகு என்ற யானை குட்டியை வளர்த்து வந்த இவர்களுக்கு ஆரம்பத்தில் தனக்குப் போட்டியாக மற்றொரு யானைக்குட்டி வந்ததை ஏற்க முடியாமல் ரகு தங்களிடம் கோபமாக முரண்டு செய்ததை தற்போது சுவாரஸ்யமாக நினைவு கூறுகிறார்கள்.