இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

9 ம் தேதி துவங்கிய நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை துவக்கி வைத்து சிறிது நேரம் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்த்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

நரேந்திர மோடியை வரவேற்க பல ஆயிரம் கட்சித் தொண்டர்களை பாஜக எம்.எல்.ஏ.க்கள் அழைத்துவந்து ஸ்டேடியத்தில் அமரவைத்திருந்தனர்.

பிரதமரைப் பார்த்த உற்சாகத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் அகமதாபாத் ஸ்டேடியத்தில் விண்ணைப்பிளந்தது.

பாஜக-வின் இந்த அப்ரோச் கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

இந்த நிலையில், நிறைவு நாளான நேற்று இந்தப் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிரா-வில் முடிந்தது இதனையடுத்து பெவிலியன் திரும்பிய இந்திய அணி வீரர்களைப் பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று மீண்டும் கூக்குரல் எழுந்தது.

டெஸ்ட் போட்டிக்கான சீசன் டிக்கெட்டை வாங்கிய கும்பல் கேலரியில் இருந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பியதோடு நிற்காமல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியைப் பார்த்து ‘ஷமி ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்டது.

மாற்று மதத்தைச் சேர்ந்த இந்திய வீரரான முகமது ஷமி-யை நோக்கி இதுபோன்ற தரக்குறைவான செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், “முகமது ஷமியை நோக்கி ‘ஜெய் ஶ்ரீராம்… ஜெய் ஶ்ரீராம்’ எனக் கோஷமிட்டது எனக்குத் தெரியாது. முதல் முறையாக இதுபோன்று கேட்கிறேன். அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கேப்டன் ரோஹித் ஷர்மா கூறினார்.

ரோஹித்தின் இந்தப் பேச்சு பொறுப்பில்லாமல் இருப்பதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தவிர, 2021-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்த போது ஒரு கும்பல் ஷமி மீது இதேபோன்ற மத ரீதியிலான தாக்குதலை தொடுத்தது.

அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி “மதத்தை வைத்து ஒருவரைத் தாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் பரிதாபத்திற்குரிய செயல். முதுகெலும்பில்லாத சிலர், தனிப்பட்ட நபரைப் பற்றித் தரம் தாழ்ந்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. மதம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான நம்பிக்கை” என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா-வின் பேச்சால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் விராட் கோலியின் பேச்சை தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவிட்டு ரோஹித் ஷர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சரியில்லை என்று விமர்சனம் எழுந்த நிலையில் அந்தப் போட்டிக்கு ஐந்து நாட்களுக்கான சீசன் டிக்கெட் எடுத்த ரசிகர்கள் பணம் பறிபோனதை அடுத்து குமுறிவருகின்றனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் சீசன் டிக்கெட் வாங்கிக் கொடுத்து மத மோதலை உருவாக்க நினைப்பது குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதுடன் இந்தியாவில் விளையாட்டு கட்டுப்பாட்டு ஆணையங்கள் சீர்கெட்டு வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.