கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளை கவரும் வகையில் உயிரினங்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிருள்ள வன விலங்குகளை போலவே யானை, மான் போன்ற வன விலங்குகளின் பொம்மை சிலைகள் வைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளன.
அங்கு வைக்கப்பட்டுள்ள அந்த பொம்மைகளை சுற்றியும் கம்பிகள் போடப்பட்டு சிறை படுத்தப்பட்டு உள்ளது. யானை தனது குட்டியுடன் இருக்கும் சிலைகளை சுற்றி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு சிறை போல உள்ளது.
பார்ப்பதற்கு தத்ரூபமாக உள்ள குட்டியுடன் உள்ள அந்த யானை சிலைகள், பொதுவாக உயிருள்ள யானைகள் அடைத்து வைக்கப்படுவது போலவே சிறைப்படுத்தப்பட்டு உள்ளது விமான பயணிகளிடையே அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக விமான நிலையம் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் பகுதி. இங்கு தேவையின்றி யாரும் நுழைய முடியாது. அப்படியிருக்கையில், அங்குள்ள யானை சிலைகள் சிறை படுத்தப்பட்டது போல அடைத்து வைத்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக காட்டு விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு போராட்டங்கள் நடைபெறு வரும் சூழலில், காட்டு யானையான சின்னத்தம்பிக்கு ஆதரவாக தமிழகமே கொந்தளித்து சேவ் சின்னத்தம்பி என்று போர்க்கொடி தூக்கியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவை விமான நிலையத்தில், யானைகளின் சிலைகள் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பது நெருடலை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைக்காவது சுதந்திரம் கொடுங்கப்பா… அதை சுற்றி உள்ள கம்பிகளை அகற்றி, யதார்த்தமாக இருப்பது போல திறந்து விடுங்கப்பா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உயிருள்ள யானைக்குத்தான் சுதந்திரம் கொடுக்க மறுத்து வருகிறீர்கள்…. உயிரற்ற பொம்மை யானைக்காவது சுதந்திரம் கொடுங்கள்… அவற்றை சுதந்திரமாக காணும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.