சென்னை,
ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கிறது தமிழக அரசு என்றும், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர் என்றும் பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ் நாட்டில் அதிமுக அரசு அமைக்கப்பட்டதன்ம முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர்.
கடந்த 5 மாதங்களில் மூன்று முதல்வர்களையும், ஐந்து முதல்வர் வேட்பாளர்களையும் பார்த்த இந்த அரசு, ஒராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதைத் தவிர இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பதவி ஏற்ற ஒராண்டு காலத்திற்குள் எந்த அரசாவது இவ்வளவு வெறுப்பையும், கோபத்தையும் மக்களிடம் சந்தித்திருக்குமா? என்ற வினாவுக்கு இல்லை; என்று மிகவும் எளிதாக பதிலளித்து விடலாம்.
அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான பினாமி அரசு ஆளாகியிருக்கிறது. பொதுவாக எந்த அரசும் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற முடியாது.
எனினும், ஒப்பீட்டளவில் அதிக நல்லத் திட்டங்களை ஓர் அரசு செயல்படுத்தும் போது அது மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாக மாறும்.
ஆனால், கடந்த ஓராண்டை 3 முதல்வர்களின் உதவியுடன் நிறைவு செய்துள்ள இந்த அரசு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுவது, ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளியாகிவிடாமல் தடுப்பது ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பணியும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்படுவது வழக்கமானது தான்.
இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆனால், எடப்பாடி தலைமையிலான பினாமி ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்ப்பது மட்டும் தான் முழு நேரப்பணியாக நடைபெற்று வருகிறது.
தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதும் கூட தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
1984-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு முறை 2007-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதனால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்க முடிந்தது. சமூக நீதியை பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.
ஆனால், நீட் என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது அதைத் தடுத்து முறியடிக்க அதிமுக அரசு தவறிவிட்டது.
இதனால், தமிழகத்தில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கனவாக மாறிவிட்டது.
உணவுப் பாதுகாப்பு சட்டத்தை மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தியது, மின்வாரி யத்தின் கடனை தமிழக அரசின் தலையில் கட்டுவதற்கான உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டது,
காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்காதது என பினாமி அரசின் வேதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
இந்திய அரசியலில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என பல்வேறு படிநிலைகள் உருவாக்கப்பட்டிருப்பதன் காரணமே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதும், மக்களுக்கான தேவைகளை அந்தந்த நிலைகளில் உள்ள நிர்வாக அமைப்புகள் தான் சரியாக செய்ய முடியும் என்பதும் தான்.
ஆனால், மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாததால் தான் 50 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களைத் திரட்டி மாநில சுயாட்சிக்காக பேரறிஞர் அண்ணா குரல் கொடுத்தார்.
ஆனால், அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுக, இந்த முழக்கங்களை வலியுறுத்தி குரல் கொடுக்காமல், தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக நடந்துகொள்வதில் தவறு இல்லை. அவ்வாறு நடந்து கொண்டால் தான் மாநிலத்தின் தேவைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடியோ தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதை விடுத்து, ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடப்பது அவலத்திலும், அவலமாகும்.
இவற்றையெல்லாம் விடக் கொடுமை மதுவுக்கு எதிராகப் போராடும் மக்களை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நடத்தும் விதம் தான். பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் மூடப்பட்ட 3321 மதுக்கடைகளையும் குடியிருப்புப் பகுதிகளில் திறக்க பினாமி அரசு துடிப்பது மன்னிக்க முடியாதது ஆகும்.
குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்க ளும் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது அடக்குமுறையை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், இப்போது தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி, தோப்பு வெங்கடாசலம் – செந்தில் பாலாஜி அணி, பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த எதிர்ப்புகளை சமாளிக்கவும், அதற்காக ஊழல் செய்யவும் தான் பினாமி அரசுக்கு நேரம் சரியாக உள்ளது.
தமிழகத்தில் 1921-ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் கொண்டால் 1991-96 காலத்திலான ஜெயலலிதா அரசு தான் மக்களின் அதிகபட்ச கோபத்திற்கு ஆளாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர்.
ஊழலில் திளைக்கும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து தமிழக மக்களிடம் பொதுக் கருத்துக் கணிப்பு நடத்துவதன் மூலம் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.
எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்