சென்னை: விளம்பர வசனம் பேசும் திமுக அரசு போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் செயலற்றதாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துவரும் கொலை சம்பவங்கள், போதை பொருட்களின் நடமாட்டம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக முன்னாள் பிரதமுகர் சாதிக்பாட்சா போதை பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தி வந்த 3 பேரை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது. இது மேலும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. மேலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சியாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக போதை பொருள் பறிமுதல் செய்யப்படுவது, போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதை காட்டுவதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் செயலற்றதாக திமுக ஆட்சி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.” இதையும் படியுங்கள்: தேனி மாவட்டத்தில் கனமழை… பெரியாறு, வைகை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு “சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் திரு. முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் “செயலற்ற ஆட்சி”யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.” “தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,”
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.