சென்னை: திமுக அரசு பதவி ஏற்றதும் கடந்த 2022ம் ஆண்டு முதல் கட்டமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு குறித்து கடந்த ஆண்டு இறுதியிலேயே தகவல்கள் பரவி வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் காரணமாக நிறுத்தி வைத்த திமுகஅரசு, தற்போது தேர்தல்கள் முடிவடைந்ததும், அதிரடியாக முன்தேதியிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
ஆனால், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக தனது தோ்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் அது இப்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.
முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டாலும், மின்சார கட்டணத்தை பொருத்தவரை பயன்படுத்தும் மின் பயனீட்டு அளவைப் பொருத்து கட்டணம் மாறுபடுகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்படுவது நடுத்தர வா்க்கத்தினா்தான். இந்த நிலையில், தற்போது மீண்டும் மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி ள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதலே அமலுக்கு வருகிறது.
மின்சார கட்டண உயர்வு குறித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பூஜ்யம் முதல் ஒவ்வொரு படிநிலை வரையிலும் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தப்படுகிறது என்ற விவரம் தரப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டு பயன்பாட்டுக்கான மின்கட்டணம் 400 யூனிட் வரை 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள 4.60 ரூபாயில் இருந்து 4.80 ரூபாயாக இனி வசூலிக்கப்படும்.
வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் 20 காசு முதல் அதிகபட்சம் 55 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது.
- 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ஆக இருந்த கட்டணம், 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.9.65-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 1000 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் ரூ.11.25-ஆக இருந்த மின்சாரக்கட்டணம், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வழிபாட்டுத் தலங்கள், தொழில் துறையினருக்கான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் வழிபாட்டு தலங்களுக்கான 0 முதல் 120 யூனிட்டுகளுக்கு ரூ.5.90-ஆக இருந்த மின்கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.20-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- காட்டேஜ் மற்றும் மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ்-க்கு , 0 முதல் 500 யூனிட்களுக்கு, ரூ.4.60-ஆக இருந்த மின்கட்டணம் 20 காசுகள் அதிகரித்து, ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.65-ஆக இருந்த மின்கட்டணம் 30 காசுகள் அதிகரித்து, ரூ.6.95-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டண உயர்வின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் மதிப்பீடு ஒன்றை அளித்துள்ளது. அதன்படி,
- 100 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. இந்த வகையில் சுமார் ஒரு கோடி மின் நுகர்வோர் இருக்கிறார்கள்.
- 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 63 லட்சம் பேர் கூடுதலாக மாதம் 5 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- 300 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 35 லட்சம் நுகர்வோருக்கு மாதம் 15 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் உயரும்.
- 400 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 25 லட்சம் நுகர்வோருக்கு மா தம் 25 ரூபாய் வீதம் மின் கட்டணம் அதிகமாக இருக்கும்.
- 500 யூனிட் வரை பயன்படுத்தும் சுமார் 13 லட்சம் நுகர்வோருக்கு மாதத்திற்கு 40 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டும் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் சிறிய அளவில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது). ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் வருடாந்திர இழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவற்றின் ஒட்டுமொத்த இழப்பும், அந்த இழப்பை ஈடுகட்ட வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையும் தொடர்ந்து அதிகரித்துவந்தன.
இதைத்தொடர்ந்து திமுக அரசு பதவி ஏற்றதும் கடந்த 2022ம் ஆண்டு முதன்முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்த நிதி சிக்கலின் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு நுகர்வோருக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 27.50 அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 800லிருந்து 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 565 ரூபாய் மாதம் அதிகரிக்கப்படும். அதேபோல வணிக ரீதியில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர, செலவைக் குறைப்பதற்காக மற்றொரு திட்டத்தையும் மின் வாரியம் முன்வைத்துள்ளது. அதாவது, தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கான மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்து
ஆனால், மிக வசதியானவர்களும் இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களில் யாராவது தாமாக முன்வந்து இந்த இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பினால், விட்டுக்கொடுக்கலாம். அதற்கான விரிவான பிரச்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் துவங்கவுள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…