திராவிட இயக்க வளர்ச்சியும்  பார்ப்பனர் மீதான தாக்கமும்  –  ஒரு அலசல்

கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

திராவிட இயக்கங்களினால் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் வளர்ச்சியையும் பேசும் நம்மில் பலர்  இந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான தாக்கம் என்ன என்பதை அறிய தவறிவிட்டோம். அல்லது, அறிந்தும் அறியாதவர் போல் இருந்துவிட்டோம். அப்படி பாதிக்கப்பட்ட பார்ப்பன சமுதாயம் சந்தித்த சவால்களை இங்கு பார்ப்போம்.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர்,  கிராமங்களில் பல மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. நில சீர்திருத்த சட்டங்களை தொடர்ந்து, அதுவரை பார்ப்பனர்களுக்கு  பாத்தியப்பட்ட கோவில் நிலங்களில் இருந்து  வந்த குத்தகை வருமானம் முற்றிலுமாக தடைபட்டது. பெரும்பாலும்  கிராமங்களில் இருந்து வந்த பார்ப்பனர்கள், நிலத்தை உடமையாக கொண்டிருக்கவில்லை. மாறாக, கோவில்களில் கிடைத்த சொற்ப வருமானங்களிலும், தங்களுக்கென்று கோவில் நிர்வாகத்தால், கோவில் திருப்பணிக்காக  ஊழியமாக கொடுக்கப்பட்ட நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் இருந்து கிடைத்த வருமானத்தில் வாழ்க்கையை ஒட்டி வந்தனர்.

ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பபட்ட  நில சீர்திருத்த  சட்டங்களினால், உழுதவனுக்கு நிலம் சொந்தமானது. இதன் பயனாக,  பார்ப்பனருக்கு பாத்தியப்பட்ட நிலங்களையும் அவர்கள்  இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்மூலமாய் நின்றனர்.

திராவிட இயக்கம் ஆரம்ப காலத்தில் மிக வீரியமாக இருந்த இயக்கம், சில கிராமங்களில், பார்ப்பனர் மீது வன்முறையையும் , வரம்பு மீறிய செயல்களையும் புரிந்தன. வருமானத்தை இழந்து, அச்சுறுத்தலுக்கு ஆளான இந்த சமூகம் 1970 -கு   பிறகாக மிக பெரிய இடப்பெயர்விற்கு ஆளானது.  குடிபெயர்தல், அன்றைய காலகட்டத்தில் அனைத்து சமூகத்திலும் இருந்தாலும், மற்றைய சமூகத்தினர் அனைவரும் தங்கள் பூர்விக இடங்களிலும் இடம் வைத்திருந்தார்கள், குடியேறிய இடங்களிலும் இடம் வாங்கினார்கள். மேலும், வறுமையும் சிறுபான்மையும்  சேர கூடாத ஒன்று. ஏனெனில், வாக்கு வங்கி அரசியலில்  ஓரளவு பெரும்பான்மையினரால் தாங்கள் நலன் குறித்தான பேரம் பேச முடிந்து வறுமையில் இருந்து தப்பினார்கள்.

பார்ப்பனர்கள், கிராமங்களை விட்டு குடிபெயரும்போது அனைத்தையும் இழந்து குடிபெயர்ந்தார்கள். இன்றைய தேதியில் அதை நினைக்கும் போது, குடிபெயர்ந்த மக்கள் அனைவரும் அதன் வலியையும் தாக்கத்தையும் உணருவார்கள் என்று நினைக்கிறன்.

வறுமையை துணைக்கு அழைத்து கொண்டு, கொஞ்சம் போல கல்வியை கொண்டிருந்த சமூகம் மயிலாப்பூரிலும், திருவல்லிக்கேணியிலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இருந்து வந்து குவிந்தார்கள். ஒண்டி குடித்தனங்கள், அரைவயிறு பசி, காலம் கடுமையாக இருந்தது. அஞ்சல் துறை , ரயில்வே துறை போன்ற இடங்களில் வேலை கிடைத்தாலும் அன்றைய சூழலில் அது மிக சொற்பமானதாகவே இருந்தது.

சென்னையில் உள்ள தொழிற்சாலைகளான ADDISON, SIMPSON ,TVS  MOTORS போன்ற நிறுவனங்களில் தொழிலார்களாக இச்சமூகத்தினர் இருந்தார்கள் என்றால் நம்மில் பலர் நம்ப மாட்டார்கள். ஆனால் அது சத்தியமான உண்மை. அதில் கண்ட வளர்ச்சியின் ஊடக பின்னர் வளசரவாக்கம், நங்கநல்லூர், ஆழ்வார்திருநகர், கே.கே. நகர்  போன்ற பகுதிகளில் புதிய குடியிருப்புகள் முளைத்தன,  தென் சென்னை எங்கும் முளைத்தன. இந்த குடியிருப்புகள் அனைத்தும் பெரும்பாலும் அன்றையதேதியில் சென்னையின் புறநகராகவும், வீடு வங்கி கடனிலும் கட்டப்பட்டிருக்கும். இன்றளவும், பெரும்பாலான  பார்ப்பனர்கள் தேவைக்கு அதிகமாக நிலத்தை வாங்குவதுமில்லை அதில் முதலீடு செய்வதுமில்லை.

வர்க்க பேதங்கள், நில சுவான்தாரர்களாலும் அதிகார வர்கத்தினராலுமே நிகழக்கூடியவை. பார்ப்பனர்களின் இந்த அவல நிலையை அன்றைய காலகட்டத்தில் கே.பாலச்சந்தர், விசு, மௌலி,  எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி, சோ, Y .G .மஹேந்திரன் போன்றோர் திரையில் ஏதோ ஒருவிதமாக வெளிக்கொண்டுவர நினைத்தார்கள். இவர்கள் இன்றைய  மாரி செல்வராஜ், ப. ரஞ்சித் போன்றோர். தமக்கான ஒரு தளம் கிடைத்தபின் தாங்கள்  சந்தித்த துயரங்களை ஒரு விதமாக வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஏனோ, அன்றைய தேதியில் நம்மில் பலருக்கு அது புரியவில்லை. அதற்கு அடுத்த தலைமுறையில் சங்கர் போன்றோர் சற்று அழுத்தமாக வெளிப்படுத்தினார்கள்.

தமிழகத்தில் நிகழும் சாதி மறுப்பு திருமணங்களில் பெரும்பாலானவை, அவர்களின் மக்கள் தொகையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் அது பார்ப்பன சமூகத்தில்தான் இருக்கும். ஆனால், அந்த திருமணங்களில் தம்பதியினர் இருவரும் நன்கு படித்திருப்பர், பணியில் இருப்பார்கள். மேலும், சாதி மறுப்பு திருமணங்களிற்கு பிறகு ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழக்கூடியவர்களும் அவர்கள் தான். இன்றளவும், தமிழகத்தில் காலதாமதமாக திருமணம் செய்வதும், வயது முதிர்ந்து திருமணம் நிகழ்வதும் இந்த சமூகத்தில் தான் அதிகம். இது ஒரு வகையில் அவர்கள் சமூக சம்பிரதாயத்தில்  உள்ள பிரச்சனை  என்றாலும் பொருளாதார பிரச்னையே அடிப்படையாக இருக்கும். இதற்கான தீர்வை பற்றி யாரும் எப்போதும் பேசியதில்லை.

இதன் தாக்கமே, இவர்களின் அடுத்த தலைமுறையின்  திமுகவின் மீதான கோபம். அவர்கள் கண்ணெதிரே கண்ட அவலங்களையும் துயரங்களையும் அதிகாரம் நோக்கிய பயணத்தால் சாதிக்க முடியும் என்று எண்ண தொடங்கினார்கள். சமூக வலைதள பிரச்சாரம் இலகுவானதாக இருந்தது. களத்திற்கு நேரடியாக வராமல் செய்யும் இந்த பணியில் இன்று அதிகமான பார்ப்பனர்களே உள்ளார்கள். அவர்கள் ஓரளவிற்கு அவர்களை போன்று சமூக நீதியால் பாதிக்கப்பட்ட இதர இனங்களையும் ஒருங்கிணைத்துள்ளார்கள்.

இன்றைய H .ராஜா,  நாராயணன் திரிபாதி, ரங்கராஜன் பாண்டே, மாலன், Dr .சுமந்த, அமெரிக்கை நாராயணன், ராகவன் போன்றோர் இந்த சமூகத்தின் குரலாக தங்களுக்கான உரிமையை கேட்டு வருகிறார்கள். இவர்களுடைய பிரச்சனை இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தால் தோல்வியடைகின்றன. இவர்கள் தர்க ரீதியான வலுவான வாதங்களை எடுத்து பேசும் மனநிலையில் இல்லை. இது பெரும்பாலும் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு ஆளாகும் சமூகத்தின் ஒரு கோபமாக தான் தெரிகிறது. அவர்களுடைய தேவையை சரியாக முன்வைக்க தெரியாமல் திணறுகிறார்கள். இல்லையேல், அவர்கள் வளர்த்த இயக்கங்களிலே, அவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு புதியவர்கள் முன்னிலை  படுத்தும் போது அவர்களின் விரக்தியில் பேசும் மொழியாக கருதலாம்.

வோட்டு அரசியலில், வாக்கு வங்கியே பிரதானம் என்பதால் இவர்களின் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ இவர்களின் பிரதிநிதித்துவம் என்ன ? இவர்களில் எத்தனை பேர் மந்திரியாகியுள்ளார்கள் ? திமுக சமூகநீதி பேசும் இயக்கமாக இந்த சமூகத்திற்கு என்ன செய்தது ? தொடர்ந்து இந்த சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு யார் பதில் கூறுவார்?

இவர்கள் மீது வைக்கப்படும் வலுவான குற்றச்சாட்டு, இந்திய வெளியுறவுத்துறை, RAW , IB , IIT , AIIMS , செய்தித்துறையில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம் என்று. 3% மக்கள், தொடர்ந்து ஆதிக்கத்தில் இருக்கிறார்கள் என்று. இதில், தமிழக பார்ப்பனர்களின் பங்கு மிக குறைவே. மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களில், தமிழகத்தின் கும்பகோணம், ஸ்ரீரங்கம், பாலக்காடு போன்ற பகுதிகளை சேர்ந்தோர் தவிர்த்து மற்றவர் அனைவரும் வட இந்திய பார்ப்பனர்கள்.

இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் மேல் தட்டு பார்ப்பனர்கள். இவர்கள் தொடர்ந்து தங்களது இருப்பை தக்க வைத்துக்கொண்டார்கள். இவர்கள், இச்சமூகத்தின் சொற்பமானவர்கள், இவர்களின் பெயர் சொல்லி தொடர்ச்சியாக கிராமங்களில் இருந்த வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பெருவாரியான  பார்ப்பனர்களை வஞ்சிப்பது சமூக நீதியாகாது.

கலைஞர், தமது இயக்கத்தில் யாதவர்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து ஒருமுறை ஒரு கல்லூரியில் தமிழ்குடிமகனை சந்தித்தபோது அவரை வலிய அரசியலுக்கு அழைத்து பதவி கொடுத்து அன்றைய தேதியில் யாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.  அதே போல, மு க ஸ்டாலினும் தற்போது Dr. செந்தில் குமார் போன்றோரை தேடி பிடித்து வாய்ப்பு கொடுத்து வருகிறார்.  இதே பாணியில் பார்ப்பன சமூகத்தில் உள்ள ராமா சுப்பிரமணியத்தை போன்றோரை கண்டு பிடித்து திமுகவில் இணைத்து அனைத்து சமூகத்திற்கான இயக்கமாக திமுகவை மாற்றவேண்டும். ஏனெனில், அறிஞர் அண்ணா தரை கூறியதுபோல பார்ப்பனர் எதிரி அல்ல பார்பனியமே எதிரி. பார்ப்பனியம், மற்றவர்களுக்கு செய்த தீங்கைவிட  பார்ப்பனர்களுக்கு செய்த தீங்கே அதிகம். அதை, மற்றுமொரு ஆய்வில் வெளிகொண்டுவருவோம்.

திராவிடம் இன்று போல் என்றும் தழைக்க  இதைப்போன்ற சில தத்துவார்த்த திருத்தங்களை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், திராவிடம் வெறுப்பு அரசியலை ஆதரிப்போர் அல்ல, அப்படி ஆதரித்தால் அவர்கள் பேசும் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி பேசும் தூய இனவாதம் மற்றும் வெறுப்பு அரசியலின் மறு பக்கமாக இருக்கும்.

மாறாக, திராவிட சிந்தாந்தம் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய ஒரு பேரியக்கமாக ஓங்கி தழைக்க வேண்டும். அதற்கு, பார்ப்பனர்களும் உள்ளடக்கிய இயக்கமாக மாறவேண்டும், ஏனெனில் அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு என்றும் துணை நிற்பார்கள், இது வரலாறு.

திராவிடம் அனைவருக்குமான சமூக நீதி இயக்கமாக மாறுமா ? காலம் விடை அளிக்கும் !