தஞ்சாவூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை ஓடும் பேருந்தில் அறுத்த கொடூர சம்பவம் தஞ்சை அருகே அரங்கேறி உள்ளது. அவனை பொதுமக்கள் பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
டிஜிட்டல் உலகின் பிரம்மாண்டம் கலாச்சார சீரழிவுகளையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதை நிரூபிக்கும் வகையிலேயே ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாலியல் தொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சோசியல் மீடியா, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றால், மக்களிடையே குறிப்பிக இளம் தலைமுறையினரிடையே காதல், வன்மம், கொடூரம், கொள்ளை போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி, தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டயப் படிப்பு படித்து வரகிறார். இவர் பேருந்தில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர்மீது ஆசை கொண்ட, அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி அஜித் (வயது 24) என்பவன், மாணவிக்கு காதல்வலை வீசியுள்ளான். ஆனால், அந்த மாணவியோ அவனது காதலை ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து அவன் டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில், மாணவி, அதை ஏற்காமல், குடும்ப சூழல் கருதி வீட்டிலும் தெரிவிக்கமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று மாணவி பேருந்தில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்தில் ஏறிய அஜித், மாணவியிடம் மீண்டும் காதலிக்க வலியுறுத்திய நிலையில், அதை மாணவி ஏற்க மறுத்ததும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த மாணவி பஸ்சுக்குள்ளேயே மயங்கி விழுந்தார். ஓடும் பஸ்சில் மாணவியின் கழுத்தை அறுப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், அலறி அடியடித்தபடி ஆளுக்கு ஒரு புறமாக ஓடினர். அப்போது பயணிகளின் அலறல் சத்தம் கேட்டவுடன் பஸ்சை டிரைவர் உடனே நிறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்து கீழே சாடிய அஜித் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைக்கண்ட பக்கத்தில் உள்ளவர்கள், சத்தம்போட, அந்த கொடூரனை அனைவரும் சேர்த்து பிடித்து, , தர்ம அடி கொடுத்து தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், மாணவியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் கழுத்தில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.