சென்னை:

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டிக்கொண்டதாம் என்று அந்த காலத்தில், சம்மந்தா சம்மந்தமில்லா விஷயத்தை ஒப்பிட நக்கலடிப்பார்கள். இன்று உலகமயமாக்கலுக்கு பிறகு இந்த பேச்செல்லாம் பொருந்தாமல் போய்விட்டது.

சென்னை தியாகராயநகரில் 550 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்களை நிறுத்துவதற்காக, பல கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பார்க்கிங் கட்டப்படுகிறது. வாகனங்களை மாடிகளுக்கு ஏற்றி இறக்க பிரமாண்டமான லிப்ட்கள் போன்றவையும் அமைக்கப்படவுள்ளன.

கட்டுமானப் பணிகள் வேக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது திடீர் சிக்கல். எல்லாவற்றுக்கும் மூலப்புள்ளி, சீனாவை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ். சீனாவுக்கும் சென்னை தியாகராய நகருக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கே. கார் பார்க்கிங் கட்டுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருப்பது சீனாவில் இருந்துதான். அவற்றை அசெம்பிள் அதாவது ஒன்று சேர்த்து இயக்குவதற்காக மிக முக்கியமான எஞ்சினியர்கள் தேவை. அவர்கள் சீனாவு வுஹான் மாநிலத்திலிருந்து வரவேண்டும். வுஹான் மாநிலம்தான் கொரோனா வைரஸ் ஆரம்பித்து பல நூறு உயிர்களை பலிவாங்கி கோரத்தாண்டவம் ஆடிவரும் பகுதி.

இதனால் இந்தியாவுக்கு பறக்க வேண்டிய எஞ்சினியர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  சீன எஞ்சினியர்கள் வராததால், சென்னை தி நகர் கார் பார்க்கிங் என்ஜினியரிங் பணிகள் முடங்கிப் போயுள்ளன..

எப்படியெல்லாம் சோதனை வருகிறது பாருங்க..