74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கொடியேற்றினார். பின்னர் தமிழக அரசின் சிறப்பு விருதினை சாதனை யாளர்களுக்கு முதல்வர் சிறப்பு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதனுக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கினார். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
சவுமியா சுவாமிநாதன், தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக அமைத்துள்ள 19 மருத்து நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி மூலமாக முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அவர் சிறப்பான முறையில் ஆலோசனை கூறியதற்காக, அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார்.
விருதைப்பெற்ற பின், சவுமியா சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.உலக அளவில் 200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளன.