சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு  வெளியேறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும்,  அரசியல் சட்டமும் தேசிய கீதமும்   அவமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்’ என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று   (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அவையில் கவனரை எதிர்த்து காங்கிரஸ், தவாக உள்பட சில கட்சிகள் கோஷம் எழுப்பினர். மேலும் தேசிய கீதம் பாடும்போதும்,  அதை மதிக்காமல் கோஷம் எழுப்பப்பட்டதால், அதிருப்தி அடைந்த ஆளுநர் ரவி, அரசின்  உரையை வாசிக்காமல் வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  ஆளுநர் மாளிகை தரப்பில், கவர்னர் உரை புறக்கணிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது.  காலை 9.43 மணிக்கு ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கமான எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

அரசியல் சட்டமும், தேசிய கீதமும் தமிழக சட்டசபையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள முதல் கடமை. கவர்னர் ரவி சட்டசபைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தேசிய கீதத்தை பாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின், சபாநாயகருக்கு கவர்னர் ரவி வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்து.

அரசியலமைப்பு சட்டம், தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாடம் மறுக்கப்பட்டது கவலைக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை கவர்னர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது.

அதில்,  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.  என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போல, இந்த முறையும் கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே நடைமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 6ந்தேதி) தொடங்கியது. முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார். இதையேற்ற ஆளுநரும், இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்றம் வருகை தந்தார்.   தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பேண்டு வாத்தியங்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதன் பிறகு சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரையாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் உரையை புறக்கணத்து விட்டு, அதை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில்  அவையில் இருந்து வெளியேறியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.