டில்லி,
டில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது. இன்றைய போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டார்.
ஏற்கனவே நடைபெற்ற 41 நாட்கள் போராட்டத்தின்போது, மத்திய மாநில அரசுகள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றாததால், மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர் தமிழக விவசாயிகள்.
முதல் நாள் போராட்டத்தின்போது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை டில்லி போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். அதையடுத்து 2வதுநாள கொட்டும் மழையிலும், அரை நிர்வாணத்துடன் தமிழக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
நேற்று 3வது நாளாக கை கால்களில் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இன்றைய போராட்டத்தின்போது விவசாயிகள் நிலங்களை ஏர்கொண்டு உழுவது போன்று, போராட்டம் நடத்தினர்.
இன்றைய தமிழக போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாததால் அவர்கள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.