புதுச்சேரி : மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்தியில் ஆளும் அரசுகள், அதை புறக்கணித்து வருகின்றன. இதனால், மாநிலத்தில், யாருக்கு அதிக அதிகாரம் என்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வருக்கும், மத்தியஅரசால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
புதுச்சேரியிலும் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாளை இரவு தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் புதுச்சேரி சென்று, தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் தனி மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலமுதல்வர் நாராயணசாமி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பிரச்னை எழுந்தது. அரசு ஊழியர்கள் சிறப்பு மாநில அந்தஸ்து கோரினர். மாநில அந்தஸ்து பெற்றால், மத்திய அரசின் மானியம் 41 சதவீதமும், சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றால் 90 சதவீதம் கிடைக்கும். ஆனால், அப்போதைய புதுச்சேரி அரசு, சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை மத்திய அரசு ஏற்கவில்லை.
அதுபோல, கடந்த 2011ல் மாநில அந்தஸ்து முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, மத்திய அரசுக்கு 2 ஆண்டுகள் ஆதரவு தந்தார். அப்போது, மாநில அந்தஸ்து பெறவில்லை.
தற்போது இதுதொடர்பாக, புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சகம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் உத்தேசம் இல்லை என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்று தெரிவித்துள்ளது.
கவர்னரை பயன்படுத்தி, மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தை மத்திய அரசு படிப்படியாக பறித்து வருகிறது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்றவர், எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து கட்சிகளையும் டில்லிக்கு அழைத்து சென்றபோது, என்.ஆர்.காங்., ஏன் வரவில்லை, பல முறை காங்கிரஸ் சார்பில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன் வைத்த போது, ரங்கசாமி ஏன் தரவில்லை, தற்போது, தேர்தல் வரும் போது மட்டும் பேசுகிறார் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
தேர்தல் புறக்கணிப்பு என்பது அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். ஒருமித்த கருத்துடன் வந்தால், காங்கிரஸ் கட்சி தலைமையின் அனுமதி பெற்று முடிவு செய்வோம். உங்கள் கூட்டணியில் உள்ள பா.ஜ., கட்சி மாநில அந்தஸ்து கொடுக்க தயாரா.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என புதுச்சேரிக்கு வருகை தரும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்துவோம். இதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் தயாராக உள்ளோம். மாநில அந்தஸ்துக்காக, தேர்தல் புறக்கணிப்பிற்கு அனைத்து கட்சிகளும் ஒத்து வந்தால், காங்கிரஸ் கட்சியும் புறக்கணிக்க தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.