சென்னை: 10 நாட்கள் மருத்துவ ஓய்வுக்குப் பிறகு இன்று  தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர், அங்கு நடைபெற்ற அரசு  நிகழ்ச்சியில்,  மாணவர்களுக்கு லேப்டாப், டிஎன்பிஎஸ்சியில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள், காவல்துறை கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 தலைச்சுற்று  காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில்,   ஒருவாரம் மருத்துவமனையிலும், கடந்த 3 நாட்களாக வீட்டிலும் ஓய்வு எடுத்து வந்தார்.  இன்று வழக்கமான பணிகளை தொடங்க தலைமைச்செயலகம் வருகை தந்தவர், மக்கள் நல பணிகளை தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிப் பாராட்டினார். தமிழ்நாட்டில்  உள்ள  ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று IIT, NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து,  உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 135 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று, மடிக்கணினிகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையடுத்து,   டிஎன்பிஎஸ்சி. மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை 2025-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ரூ.229 கோடியில் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.27.59 கோடியில் காவல்நிலைய கட்டடங்கள், தீயணைப்பு துறையில் ரூ.13.54 கோடியில் கட்டடங்களை திறந்து வைத்தார்.

 ரூ.45 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலமாக மதுரை மத்திய சிறையில் ரூ.229 கோடி மதிப்பு கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.