வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நிர்வாக அதிகார வரம்பு இல்லாமல் திவாலாகும் நிலையில் உள்ளதால் ஒழுங்குமுறை நிலுவைத் தொகை ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து வரவேண்டிய தொகைக்கு ஈடாக அதன் பங்குகளை ஏற்கனவே கைப்பற்றியுள்ள மத்திய அரசு தற்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் (ET) செய்தி வெளியிட்டுள்ளது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue – AGR) தொடர்பான நிலுவைத் தொகையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில், திருப்பிச் செலுத்தும் காலத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிப்பதும், அதே நேரத்தில் கூட்டு வட்டி அல்லது வட்டி மீதான வட்டிக்குப் பதிலாக நிலுவைத் தொகையில் எளிய வட்டியைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் ET இடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வோடபோன் நிறுவனம் மூடப்பட்டால் 49% பங்குகளைக் கொண்ட மிகப்பெரிய பங்குதாரரான மத்திய அரசு மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அரசு கருவூலத்திற்கு வந்து சேரவேண்டிய மிகப்பெரியத் தொகை வந்து சேராது என்பதால் இதைத் தவிர்க்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

வட்டி மற்றும் அபராதங்களைத் தள்ளுபடி செய்வதில் ஏற்கனவே உள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பலனளிக்காது என்பதால் புதிதாக ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும். ஆனால் எந்த விருப்பம் இறுதி செய்யப்பட்டாலும், அது சட்டப்பூர்வமாக இருக்கவேண்டும் என்பதால் அதிகாரிகள் மிகவும் குழம்பிபோயுள்ளதாகக் கூறப்படுகிறது.

மார்ச் 2025 நிலவரப்படி ரூ.83,400 கோடி ஏஜிஆர் நிலுவையில் உள்ளது, இதன் வருடாந்திர கட்டணத் தவணைகள் மார்ச் 2026 முதல் செலுத்தப்பட உள்ளன, மேலும் மார்ச், FY31 வரை செலுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, நஷ்டத்தில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த நிதியாண்டின் மார்ச் மாதத்திற்குள் ரூ.18,064 கோடியை செலுத்த வேண்டும்.

மார்ச் மாத இறுதியில், அதன் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு மொத்தம் ரூ.9,930 கோடியாக இருந்தது, மேலும் AGR நிலுவைத் தொகையில் எந்த நிவாரணமும் இல்லாமல், நிறுவனம் செயல்பட முடியாது என்று அரசாங்கம் அஞ்சுவதாக ET வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.