மனைவியின் மணிவிழாவை கொண்டாடிய பிரபலம்!

சுசீலா – வி.கே.டி.பாலன்

நெட்டிசன்:

றுபதாவது பிறந்தநாள் என்பது பொதுவாகவே முக்கியத்துவம் வாய்ந்தது. அன்று சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடுவார்கள். திருமணம் போலவே அன்று கணவர், மனைவிக்கு தாலி கட்டுவார்.

ஆனால் இது ஆண்களுக்கான நாளாகவே கடைபிடிக்கப்படுகிறது. அதாவது கணவரின் அறுபதாம் பிறந்தநாள் அன்றுதான் இது கொண்டாடப்படுகிறது.

ஆனால்  பிரபல தொழிலதிபரான மதுரா டிராவல்ஸ் அதிபர்  வி.கே.டி.பாலன், தனது மனைவியின் அறுபதாம் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியிருக்கிறார். அதுவும் தனது அறுபதாம் பிறந்தாளை புறக்கணித்துவிட்டு…!

படித்துப்பாருங்கள் அவரது முகநூல் பதிவை.. நெகிழ்ந்து போவீர்கள்!

“நேற்று (11.01.2017 அன்று)  என் மனைவி சுசீலாவின்  அறுபதாவது  பிறந்தநாள் மற்றும் மணிவிழா(சஷ்டியப்தபூர்த்தி).

அப்போ எனக்கு…?

ஐந்து  வருடத்திற்கு முன்னரேயே வந்தது எனக்கும் மணிவிழா. என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மனைவி பிள்ளைகள் சேர்ந்து விழா ஏற்பாடுகளை அவர்களாகவே செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திருக்கடையூர் கோயிலில் பூஜை.. .தாலி கட்டல்.. பக்கத்திலேயே பெரிய மண்டபத்தில் விருந்து..  என – என் கவனத்திற்குக் கொண்டு வராமலேயே – ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

மெல்ல மெல்ல இதுஎனக்கு தெரிய வந்தது.

“எனக்கு சஷ்டி கொண்டாடுவதில் விருப்பமில்லை” என்று உறுதிபடகூறினேன். அவர்களோ, “அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது…. ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாகிவிட்டது.. இப்போ என்ன செய்வது ?” என்றார்கள்.

நானோ, “என்னிடம் கேட்டிருந்தால் என் கருத்தை சொல்லியிருப்பேனே” என்றேன்.

அவர்களோ, “ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்றுதான் சொல்லவில்லை”என்றார்கள்.

“அனைத்தையும் ரத்து செய்யுங்கள் “என்றேன்.

“அப்படியானால் சஷ்டியை செய்ய வேண்டாமா”.என  என் மகள் கேட்டாள்.

“செய்யத்தான் வேண்டும்.  எனக்கு அல்ல உன் அம்மாவுக்கு”என்றேன்.

“என்னப்பா  சொல்கிறீர்கள்” – இது என் மகன்.

நான் நீண்ட பெருமூச்சுடன், “உங்கள் அம்மாவாகிய என் மனைவி என்னை மணமுடித்த காலமுதல் பட்ட துன்பம், துயரங்கள் ஏராளம்! சோகம், கண்ணீர் ஏராளம்! சொல்லில் சொல்லமுடியாதவைகள் ஏராளம்..ஏராளம்..ஏராளம்!

இவைகளுக்கெல்லாம் பிராயசித்தம் செய்வதற்காகவே, அவருடைய அறுபதாவது பிறந்தநாள் அன்று மணிவிழாவை – சஷ்டியப்தபூர்த்தியை கொண்டாடலாம். அதற்கு இன்னும் ஐந்து வருடங்கள்தான் இருக்கின்றன. அதையே மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்” என்றேன்.

நமது பாரம்பரியம் என்பதை வைத்து  தர்க்கங்கள்,வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. ஆனால் நான் அசைந்து கொடுக்கவில்லை. என் மணிவிழா நின்று போனது.

ஆனால்  நான் நினைத்த – விரும்பிய – ஆவலுடன் காத்திருந்த.. என் மனைவி சுசீலாவின் மணிவிழா நேற்று (10 -10-2017) இனிதே நிறைவேறியது.

மணிவிழா…

நான் பெரிதும் மதிக்கும் மாமனிதர் ஐயா ஆயக்குடி இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்,எனது சொந்த ஊரான திருச்செந்தூரில் உள்ள,என் தாத்தா,பாட்டி,என் தாய் தந்தையர் புதைக்கப்பட்ட சமாதியில் வைத்து,கணவனை இழந்த என் மாமியார் கையால் தாலியைத் தொட்டு எடுத்து தர,என் மனைவி கழுத்தில் தாலியை கட்டினேன்!

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, நன்றி! ” – இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் வி.கே.டி. பாலன்.

தன் மனைவி மீதான பேரன்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியிருக்கும் வி.கே.டி.பாலனை வாழ்த்துவோமே.
English Summary
The celebrity, celebration of the wife's Manivizha!