டில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையர் ராவத் தெளிவுபடுத்தி உள்ளார்.
உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதால், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு அறிவிக்காது என கூறப்பட்டது.
மத்தியஅரசும், இதுவரை கா.மே.வா. அமைப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இன்றைய கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் ராவத், கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதும், செய்தியாளர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எந்த தடையும் கிடையாது என்றும் கூறி உள்ளார்.
காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறுக்கிட மாட்டோம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெளிவு படுத்தி உள்ளார்.
தேர்தல் ஆணையரின் இந்த அறிவிப்பு கர்நாடக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.