பொராட்டத்தின் போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்ததற்காக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தடைகளை மீறி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நேற்று இரு பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் இருவர் சபரிமலைக்கு சென்றதை தொடர்ந்து கேரளாவில் வன்முறை வெடித்தது. ஆங்காங்கே பாஜக மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
சபரிமலைக்கு பெண்கள் சென்றதை கண்டித்து சென்னை பல்லாவரத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவி உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 150 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளது. இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பக்தன், விசுவ இந்து பரிசத் மாநில செயலாளர் ராமன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள அரசின் சுற்றுலா துறைக்கு சொந்தமான ஹோட்டல் மீது நேற்று இரவு 10 மணிக்கு சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் செயல்பட்டுவரும் கேரள நிறுவனங்களை பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.