டெல்லி: தமிழ்நாடு அரசின் குட்கா தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா, புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது,, கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த உத்தரவை எதிர்த்து புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், ஜனவரி 25ந்தேதி அன்று புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகையிலை, குட்கா பொருட்களுக்கு பல ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால், பல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மக்களின் சுகாதாரம் சார்ந்த விஷயம் என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் குட்கா தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக வரும் 20-ந் தேதிக்குள் குட்கா, பான்மசாலா நிறுவனங்க பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் குட்கா, புகையிலை விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கயை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.