சென்னை:
தமிழக தலைமைநீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு விழா இன்று காலை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அதிமுக அமைச்சர்களின் கார்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்று இடித்துக்கொண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமைநீதிபதி பதவி ஏற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட சில மூத்த அமைச்சர்களும் சென்றனர். அப்போது ராஜ்பவனுக்குள் நுழையும் வாசலில் அதிமுக அமைச்சர்களின் கார்கள், ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்று, முடியாமல் வாசலில் சிக்கி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு கருதி ராஜ்பவனின் வாசலில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஒரு கார் மட்டுமே உள்ளே செல்ல முடியும். ஆனால், இன்று காலை ஒரே நேரத்தில் இரு அமைச்சர்களின் கார்கள் செல்ல முயன்று, இரு கார்களும் உரசி, சிராய்த்துக்கொண்டு நின்றது.
இதையடுத்து, இரு கார்களின் டிரைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி சண்டைப்போட்டுக் கொண்டிந்தனர். இந்த சமயத்தில் அங்கு வந்த 3 அமைச்சர்களின் கார்களும், ஏற்கனவே 2 அமைச்சர்களின் கார்கள் உரசிக்கொண்டு நிற்பதை கண்டுகொள்ளாமல், இடையப்பட வெளியில் புகுந்து உள்ளே செல்ல முயன்ற சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவவம் அங்கு நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஒரு காருக்குசெல்லக்கூடிய இடத்தின் வழியாக அடுத்தடுத்து பல கார்கள் செல்ல முயற்சித்த சம்பவம், அமைச்சர்களுக்குள் தான் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது என்றால், தற்போது அவர்களின் கார்களுக்கும், கார் டிரைவர்களுக்கும் இடையேயும் கோஷ்டி பூசல் தொடர்வது கண்கூடாக தெரிய வந்தது.
இந்த சம்பவத்தைக் கண்ட, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், அமைதியாக கார்களில் ஒன்றின் ஜன்னலைத் தட்டி, “மூன்று கார்கள் இதன் வழியாகச் செல்லும் என்று நினைக்கிறீர்களா?” புன்னகைத்து விட்டு சென்றார். அவரது புன்னகை பல்வேறு கேள்விகளை எழுப்பியது….
மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களே, தங்களது டிரைவர்களை சண்டையிட்டுக் கொள்வதை காணாததுபோல, இருந்த காட்சி சிறுபிள்ளைத்தனமானதாக இருந்ததாக அங்கிருந்த செய்தி யாளர்கள் கூறினர்.
அதிமுகவில் உள்ள கோஷ்டி பூசல் காரிலும் தொடர்கிறதுபோல என நக்கல் செய்தனர். அப்போது ஒரு செய்தியாளர், “அமைச்சர்கள் கார்கள் கூட ஒருவருக்கொருவர் அரசியல் செய்கிறது” என்று குறிப்பிட்டார்
இந்த சம்பவம் அங்கிருந்த செய்தியார்களிடையே சிரிப்பை வரவழைத்தது…அதே வேளையில் ஆளும் அதிமுக அரசின் லட்சம் இதில் வெளிப்பட்டு இருப்பதாக கூறினர்.