டெல்லி:
குடியுரிமை சட்டதிருத்த மசோதா, தேசிய பதிவேடு மசோதா போன்றவை இந்தியா மீது பாசிஸ்டுகளால் தாக்கப்படும் ஆயுதங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
மத்தியஅரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த தேசிய பதிவேடு சட்ட மசோதாவுக்கு பல மாநிலங் களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
டெல்லி உள்பட வடகிழக்கு மாநிலங்களில் மசோதாவுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தலைநகர் டெல்லியில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, மத்தியஅரசு அமல்படுத்தி வரும் மசோதாக்கள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தி உள்ள CAB & NRC ஆகியவை இந்தியா மீது பாசிஸ்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வெகுஜன துருவமுனைப்பு ஆயுதங்கள். இந்த அழுக்கு ஆயுதங்களுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு அமைதியான, வன்முறையற்ற சத்தியாக்கிரகம் நடத்த வேண்டும், அதுபோன்று அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவருடனும் நானும் இணைந்து நிற்கிறேன் என்று டிவிட் பதிவிட்டடுள்ளார்.