சென்னை: “ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைந்து பாரதத்தின் அடையாளத்தை அழிக்க முற்பட்டனர்” என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி யின் கருத்துக்கு தமிழ்நாடு ஆயர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்துள்ளதாக தமிழக ஆயர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை அன்று சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கின்ற P.S. கல்விக் குழுமத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய மாண்புமிகு ஆளுநர் R.N. ரவி அவர்கள், புதிய பாரதம் மிக எழுச்சியுறுவதாய் உள்ளது என்றும், இதற்கு சமஸ்கிருத கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்றும் வழக்கம் போல தன்னுடைய பொய் பிரச்சாரத்தை பதிவு செய்திருக்கிறார். சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி இத்தகைய உண்மைக்குப் புறம்பான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், அவர்கள் சிறுபான்மை சமூகத்தின் மீதும் சமய சார்பற்ற இந்திய மக்கள் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
“ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைந்து பாரதத்தின் அடையாளத்தை அழிக்க முற்பட்டனர்” என்றும், “பாரதத்தின் உணர்வை குறைப்பதற்கு இந்திய கல்வி முறையை அழித்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். அத்தோடு “நம்முடைய செல்வங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் திருடிச் சென்று விட்டனர் எனவும், “நமது நாட்டில் உள்ள மக்களுக்குத் தவறான ஓர் அடையாளத்தை உருவாக்க, வரலாற்றைத் திரித்து தவறான வரலாற்றைப் புகுத்தினர்; இது நன்குத் திட்டமிடப்பட்ட ஒரு சதி செயல்” என்றும் பொய் பிரச்சாரம் பரப்பியிருக்கிறார்.
மான்புமிகு ஆளுநரின் இக்குற்றச்சாட்டுக்கள் நமக்கு புதிதல்ல. மேற்சொன்ன அனைத்திலும் பல விஷம கருத்துக்கள் பொதிந்துள்ளன. இக்கூட்டில் ஒரு சூட்சமம் ஒளிந்துள்ளது ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்களும் ஓரணியாகவும் மற்றவர்கள் எதிரணியாகவும் இருந்ததாக கூறுவது முற்றிலும் வரலாற்று திரிபாகும்.
ஆளுநர் என்பவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கும் மாநில அரசுடன் இணைந்துச் செயல்பட கடமைப்பட்டவர். ஆனால் ஆளுநர்ரவி பொய் பரப்புரையை மேற்கொண்டு மீண்டும் மீண்டுமாக சிறுபான்மை சமூகத்தையும் அதிலும் குறிப்பாக கிறிஸ்துவச் சமூகத்தை இழிவுபடுத்தி வருவது வெட்கத்துக்குரியது. அனைத்து மதங்களையும், மரபுகளையும் கிறிஸ்தவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். கிறிஸ்தவர்கள்மக்களையும், மண்ணையும், அதன் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் பெரிதும் பற்றிக் கொண்டவர்கள். மாநிலத்தின் ஒற்றுமையோடும், அமைதியோடும் வளர்ச்சியை நோக்கி நடை போடும் மக்களின் நடுவில், வெறுப்பு அரசியல் ஒன்றை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். மக்களிடையே பிரிவினையை விதைத்து 105 மோதல்களையும், சமூக மோதல்களையும் தூண்டி விடுவதற்காக சிறுபான்மையினரின் உரிமைகளையும் மாண்பையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.
இந்திய சமூகத்திற்கு மிஷினரிமார்கள் ஆற்றிய கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, மருத்துவத் தொண்டு ஆகியவைப் பற்றி இந்திய மக்கள் நன்கு அறிவர். இந்தியா இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்குச் சிறுபான்மை சமூகமும், மிஷினரிகளும் ஆற்றிய அளப்பரியக் காரியங்களை யாரும் மறக்கவும் மாட்டார்கள்; மறுக்கவும் மாட்டார்கள். இன்றளவும் அப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதில் மாற்றுக் கருத்து என்பது இல்லை.
உண்மையை மூடி மறைத்து, பொய் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பேசி, தமிழகத்தில் அமைதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி வரும் ஆளுநர் ரவி அவர்களைக் கிறிஸ்தவர்களின் சார்பாகவும் குறிப்பாகத் தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூக மக்களின் சார்பாகவும், நட்புறவோடும் ஒற்றுமையோடும் வாழும் அனைவரின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சாதி மத பிளவுகளை கடந்து மக்கள் ஒன்றுபட மான்புமிகு ஆளுநர் அவர்கள் வழிகாட்ட வேண்டும்.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை சீர்குலைப்பதில் இருந்து விலகி, தான் வகிக்கும் பதவிக்குரிய மேன்மையான, அரசியல் சாசன பணிகளை மட்டும் ஆற்றிட கேட்டுக்கொள்கிறோம்.தமிழக ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான இப்பேச்சை தமிழக ஆயர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காத வண்ணம் அவர் கண்ணியமாகப் பேசவும், அனைவரையும் சமமாக நடத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்,
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.