டில்லி:
காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு திட்டம் தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இதற்கு கர்நாடக அரசும், மத்திய அரசும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நீர் பங்கீடு குறித்த இறுதி முடிகளை வாரியமே எடுக்கும் என்றும், அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
இன்றைய விசாரணையின்போது, காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக வேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்த நிலையில், கர்நாடகாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கோ, தமிழகத்திற்கோ உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல் நீர் பங்கீடு தொடர்பான இறுதி முடிவை மத்திய அரசு தான் எடுக்கும் என மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் நீர் பங்கீடு தொடர்பான முடிவை வாரியம் தான் எடுக்கும் என்றும், இதில் மத்திய அரசு தலையிட உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் மத்திய அரசின் மனுவை நிராகரித்தது.
அதேவேளையில் தண்ணீர் திறக்கும் அதிகாரம் வாரியத்திற்கு வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து நாளை விசாரணையின்போது பதில் சொல்லப்படும் என வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.