சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திமுகவின் கூற்று உண்மை என்பதை அதிமுக பிரமுகரின் கைது உறுதி செய்துள்ளது என்று திமுக மகளிர்அணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா ? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
பொள்ளாச்சியில் 2019-ஆம் ஆண்டு ஏராளமான இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த பாலியல் சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம உள்பட 3 பேரை சிபிஐ நேற்று இரவு கைது செய்துள்ளது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இந்த கொடூரமான பாலியல் சம்பவத்தில், ஆளுங்கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வந்த சிபிஐ, நேற்று திடீரென 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளவர்கள்மீது போடப்பட்ட போக்சோ சட்டமும் சமீபத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தின் பின்னணியில் அதிமுகவின் பலம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில், சிபிஐ அதிரடியாக பொள்ளாச்சி மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர் மட்டுமின்றி, அ.தி.மு.கவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து திமுக மகளிர்அணிச் செயலாளர் கனிமொழி காட்டமாக அதிமுகவினருக்கு கேள்விக்கு எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, @AIADMKOfficial மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது.
பரபரப்பான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் @ AIADMK இன் பொள்ளாச்சி நகர பிரிவு செயலாளரை கைது செய்யப்பட்டுள்ளது, அதிமுக அனைவரையும் பராமரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை மாநில காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்திருந்தால், இந்த விவகாரம் வெளிப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.