சென்னை:
அனல் வெயிலின் தாக்கத்தால் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாகும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மே 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா ஊரடங்கும் இந்த சமயத்தில் சேர்ந்துகொண்டதால், அலுவலகம் சென்று ஏசியில் பணியாற்றுவோரும் , வீட்டிலேயே சிக்கிகொண்டுள்ளதால், வெயிலின் கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான அம்பான் புயல், நேற்று மேற்கு வங்காளத்தில் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் கிஞ்சித்தும் கருணை காட்டாமல் சென்றுவிட்டதோடு, இங்கிருந்த ஈரப்பதங்களையும் வாரி சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தமிழகத்தில், குறிப்பாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், இந்த வருடத்தில் மிக அதிகமான வெப்பநிலை நேற்றுதான் (20/05/2020) சென்னையில் காணப்பட்டு உள்ளது. சென்னைவாசிகள் இன்னும் 3-4 நாட்களுக்கு இந்த வெப்பநிலையை சகித்துக் கொள்ள வேண்டும். இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
தமிழகம் பக்கம் திரும்பும் ராயலசீமா பகுதியில் இருந்து அதிக வெப்பம் தமிழகம் பக்கம் இன்று திரும்பும். முக்கியமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு பக்கம் அதிகமாக இந்த வெப்பம் வரும். இதனால் வெப்பநிலை அதிகரிக்கும்.
நேற்றை விட இன்று அதிக வெப்பநிலை இருக்கும். வெப்பநிலை 41 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருந்து 42/43 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இரவு நேரம் இரவிலும் கூட வெப்ப காற்றை நாம் உணர வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் வடமேற்கு திசை மற்றும் மேற்கு திசையில் ஜன்னல்கள் இருந்தால் அதை மூடி வையுங்கள். இதன் மூலமாக வீட்டிற்குள் வெப்ப காற்று வருவதை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.