வாஷிங்டன்:
உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசாஸ், முதலிடம் பிடித்தார். இத்தனைக்கும் இது ஒரே நாளில் நடந்துள்ளது என்பது ஆச்சர்யமான விஷயமாக அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளில் நவம்பர் கடைசி வெள்ளிக்கிழமையை ‘ப்ளாக் ஃப்ரைடே’ என்று கொண்டாடப்படும். இந்த தினத்தின் போது பெரிய நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் மிகப் பெரிய சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும்.
தற்போது ஆன்லைன் ஷாப்பிங்’ செய்வதை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். கடை வீதிகளில் இருக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், இருக்கும் இடத்திலேயே அனைத்துப் பொருட்களும் சலுகை விலைகளில் கிடைப்பதும் தான் இந்த இணைய வழி ஷாப்பிங்குகளின் வெற்றியாக உள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் பிரபலமான அமேசான் நிறுவனம் பல சலுகைகளை இந்த பிளாக் ஃப்ரைடே தினத்தில் அறிவித்தது. இது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.
இதுவே, அமேசான் நிறுவனர் ஜெஃப், உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற வைத்தது. அதுமட்டுமல்லாமல் அவரது மொத்த சொத்து மதிப்பும் 100 பில்லியன் டாலராகஉயர்ந்துள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பில் கேட்ஸை (90 பில்லியன் டாலர்கள்) விட அமேசான் நிறுவனர் ஜெஃப், 1 சதவீத வளர்ச்சியுடன் (90.6 பில்லியன் டாலர்கள்) முன்னிலைப் பெற்றார்.
இதனால் அமேசான் நிறுவனத்தினுடைய பங்கு மதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி பரபரப்பாகவே இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலையின் காரணமாக அமேசான் நிறுவனர் ஜெஃப், உலக பணக்காரர்கள் பட்டியலில் 100 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தை உறுதி செய்தார்.