காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மறுபங்கீடு செய்யவும், பரம்பரை வரியை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இவர்களின் இந்த பேச்சு இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை அம்பலப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமத்துவமின்மை “தொற்றுநோய்” என்று குறிப்பிடும் அவர்கள் சமத்துவமின்மையால் வேலையின்மை, ஊதிய உயர்வு இல்லாத தேக்கநிலை, பலவீனமான முதலீடு, சிறு தொழில்முனைவோருக்கு சாதகமற்ற சூழல் மற்றும் சமநிலையற்ற வரி முறை என்று பட்டியல் நீண்டுகொண்டே போவதாகக் கூறியுள்ளனர்.
2014 மற்றும் 2023 க்கு இடையில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக கூறும் இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இருந்ததை விட இன்று இந்தியாவில் அதிக சமத்துவமின்மை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் நாற்பத்தி இரண்டு சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். தொழிலாளர் சந்தையில் பெண்களின் இருப்பு ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவாக உள்ளது.
இந்தியாவின் உயர்மட்ட 1 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் 40 சதவீதத்தை வைத்துள்ளனர். ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, 21 கோடீஸ்வரர்களிடம் 70 கோடி இந்தியர்களின் சொத்து உள்ளது.
இந்த சமத்துவமின்மைக்கு பாஜகவின் கொள்கைகள் நேரடியாக காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்த காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புதல், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சி பெறும் உரிமை, இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ரூ. 5,000 கோடி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல திட்டங்களை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கொண்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்களுக்கான குறைந்தபட்ச தினக்கூலியான ரூ.400 மற்றும் ரூ. 1 லட்சம் ‘மகாலட்சுமி திட்டம்’ ஆகியவை மகளிரின் வாங்கும் திறனை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கையை விமர்சித்திருப்பதன் மூலம் பாஜக ஆட்சியில் அனைத்து பிரிவிலும் உள்ள சமத்துவமின்மை வெட்டவெளிச்சமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.