அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை வளைக்க பகீரத முயற்சிகளை நேரடியாகவே மேற்கொண்டன.
அப்பாவுடன் அ.தி.மு.க.வும்,அன்புமணியுடன் தி.மு.க.வும் பேச்சு நடத்தின. கடைசியில் ஜெயித்தது- பெரியவர் தான்.
பா.ம.க.விடம் அப்படி என்ன ‘கிரேஸ்’ இருக்கிறது?
வளமாக –வலிமையாக இருக்கும் வாக்கு வங்கிதான்.
25 ஆண்டுகளாக தனது வாக்குகளை பொத்தி பொத்தி அடைகாத்து வந்துள்ளது பா.ம.க.
1996-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ம.க. 116 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்டது. 4 இடங்களில் வென்றது.
ஆண்டிமடம் , தாரமங்கலம், எடப்பாடி, ஜெயங்கொண்டம், விருத்தாசலம், பென்னாகரம் ஆகிய 6 தொகுதிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கி இருந்தது. இது –அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு நிகரான வாக்குகள் ஆகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் 232 தொகுதிகளில் பா.ம.க. தனித்து நின்றது. ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை என்றாலும், தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, ஜெயங்கொண்டம், எடப்பாடி ஆகிய ஐந்து தொகுதிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கியது.
இதுவும்- திராவிட கட்சிகளுக்கு நிகரான வாக்குகள் தான்.
கடந்த சட்டபேரவை தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் –தர்மபுரி, சிதம்பரம், விழுப்புரம், அரக்கோணம், சேலம், ஆரணி, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய எட்டு எம்.பி. தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க.உள்ளது.
இரண்டு திராவிட கட்சிகளும் பா.ம.க.வை இழுக்க போட்டா போட்டி நடத்தியது-இந்த வாக்கு வங்கி கணக்கை வைத்துத்தான்.
மேற்சொன்ன 8 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ம.க.ஓட்டுகள் மட்டுமே போதும். பா.ஜ.க. உள்ளிட்ட உதிரி கட்சிகளின் வாக்குகள் – ஓட்டு வித்தியாசத்தை அதிகரிக்க துணை நிற்கும்.
மக்களவை தேர்தலுடன் 21 சட்டபேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில்- 8 இடங்களின் வெற்றியும் பா.ம.க.கையில் தான் உள்ளது.
-பாப்பாங்குளம் பாரதி