மேலூர்.
கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட் உத்தரவிட்டது.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது(சப் டிவிசன்) தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை சப்-டிவிஷனும் செய்ய வில்லை.
இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை அளந்து பிரிக்க உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
இதன் காரணமாக அவர்கள் மீண்டும் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த கோர்ட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.