மீரட்:
பாரதியஜனதா ஆட்சி செய்துகூரமு உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் 100 அடி உயர சிலையுடன் கோவில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோடியின் சாதனைகளை பாராட்டும் வகையில் இந்த சிலையும், கோவிலும் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
உ.பி. மாநில பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தில் பொறியாளராக இருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்ற ஜே.பி.சிங் என்பவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மோடியின் தீவிர பக்தரான இவர், மோடியின்மீதுள்ள அன்பின் காரணமாகவும், அவரது சாதனைகளை பாராட்டும் வகையி லும், அதை நினைவுகூறும் வகையில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.
இதற்காக மீரட்- கர்னல் தேசிய நெடுஞ்சாலையில் 5 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இந்த இடத்தில் பிரதமர் மோடியின் 100 அடி பிரமாண்ட சிலையுடன் கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்துள்ளார்.
இந்த கோவிலின் கட்டுமான பணிக்கான பூமிபூஜை வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க ஜே.பி.சிங் திட்டமிட்டுள்ளார்.
இந்த கோவில் கட்ட தேவையான பணம் பொதுமக்களிடம் இருந்தும், பெரும் முதலாளிகளிடம் இருந்தும் நன்கொடையாக திரட்ட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.