திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைமாதத் தெப்பத்திருவிழாவையொட்டி, கோவில் கொடி மரத்தில் நேற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 24ம் தேதி வரை காலை, மாலையிலும் கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் மட்டுமே சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் மற்றும் தைப்பூச தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் வருகை தந்து, முருகனின் அருள்பெற்று செல்வர்.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் உள்திருவிழாவாக தொடங்கியது.
இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க மூலம் பூசப்பட்ட கம்பத்தில் பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 9.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
திருவிழாவை யொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப் பட்டு கோவிலுக்குள் சாமி புறப்பாடு நடக்கிறது. மேலும் தெப்பத்தில் சாமி எழுந்தருள்வது தவிர்க்கப்பட்டு உள்ளது.
சாமி புறப்பாட்டில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் கோவிலுக்குள் கருவறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.