இழுத்தடித்த தாசில்தார்.. கைகொடுத்த சப்-கலெக்டர்..


“எங்க ஹோம் ஆரம்பிச்சு 30 வருசத்தில இது தான் முதல் முறை, நாங்க இப்படி ஒரு சிக்கலை சந்திக்கிறது…  இந்த அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தால் தான் இதிலிருந்து நாங்க தப்பிக்க முடியும்” என்று மிகுந்த வருத்தத்துடன் சொல்கிறார் திரு.E.J. பால், சென்னை ஐயப்பன் தாங்கலை அடுத்த கொளுத்துவாஞ்சேரியிலுள்ள “லிட்டிள் டிராப்ஸ்” என்னும் ஆதரவற்றோர் இல்லத்தின்  ஸ்தாபகர்.

“இப்போதைய சூழலில் எட்டு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது.  இதன் பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியவில்லை, இந்த ஊரடங்கு நேரத்தில்” என்கிறார் மேலும்.

இதைப் போன்ற இல்லங்களுக்கான உரிமங்களை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும் அப்போது தான் அரசின் சலுகைகள், ரேசன் பொருட்கள் மற்ற உதவிகளைப் பெற முடியும்.  இது ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துவதற்கான அரசின் நடைமுறை.

திரு. பால் அவர்கள் இதற்கான விண்ணப்பத்தினை தகுந்த சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் தாசில்தார் மற்றும் சமூக நலத்துறை அலுவலகத்தில் கடந்த 2019, மார்ச் மாதமே சமர்ப்பித்துவிட்டார்.  ஆனால் இன்னமும் இவரது இல்லத்திற்கான உரிமத்தைப் புதுப்பித்துத் தராமல் இழுத்தடித்துக்கொண்டே வந்திருக்கின்றனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

இதைப்பற்றி இவர் கூறும்போது, “ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஒவ்வொரு குறையைச் சொல்கின்றனர். அப்ளிகேஷன் கொடுக்கும் போதே, பில்டிங் ஸ்டெபிலிட்டி சர்டிகேட், ஃபையர் சர்வீஸ் பெர்மிசன்னு எல்லாம் குடுத்தாச்சு.  ஆனா சுவரின் அமைப்பு சரியில்ல, கரண்ட் கனெக்சன்ல பிரச்னை, நிலத்தில கோளாறுனு எதையாவது காரணங்களை சொல்லி தள்ளி போட்டுட்டே தான் வராங்க…” என்கிறார்.

இந்த இல்லத்தில் இருப்போர் அனைவரும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான்.  சிலர் 90 வயதைக் கடந்தவர்களாகவும் உள்ளனர்.  இந்த உரிமம் புதுப்பித்தல் சிக்கலால் பெரிய அளவிலான டொனேசன் எதையும் பெற முடியாமல், தனிநபர்களிடமும், ஒருசில பெரிய நிறுவனங்களிடமிருந்து உணவுப் பொருட்கள் உதவி என்று பெற்றுத் தான் நடத்தி வருகின்றனர்.

இப்போதோ இந்த ஊரடங்கினால் யாரிடமிருந்தும் பெரிதாக எந்த உதவிகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ள இல்லத்திலுள்ளோர் அவர்களாகவே தங்களது உணவின் அளவினை குறைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர், உணவு இருப்பு நீண்ட நாட்கள் வருவதற்காக.

இதுபற்றி அறிய முயன்ற போது சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை.  ஆனால் காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன் அவர்கள் இந்த பிரச்சினை தொடர்பாக இன்னமும் 24 மணி நேரத்திற்குள் தக்க நடவடிக்கைகள் எடுத்து வேண்டியதைச் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

“இது மிவும் மோசமான சூழ்நிலை. இந்த ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேசன் கடைகளின் மூலம் அளிக்க உடனே ஏற்பாடு செய்கிறேன்.  மேலும் இவர்களின் உரிமம் புதுப்பித்தலில் உள்ள சிக்கல் என்ன என்பதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அறிந்து சரி செய்யவும் ஆவன செய்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

– ஏழுமலை வெங்கடேசன்