தூத்துக்குடி:

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 563143 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கனிமொழி,  நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்ற வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும்  தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி முதன்முதலாக  களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடார். அங்கு கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், கனிமொழி சுமார் 563143 வாக்குகள் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசையை விட 347209 அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட சுமார் 38 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக கனிமொழி 563143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து  பாஜகஅதிமுக கூட்டணி வேட்பாளர்  தமிழிசை 215934 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் டாக்டர் புவனேஷ்வரன்  76866 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும்  நாம் தமிழர் கட்சி 49222 வாக்குகளும்,  மக்கள் நீதி மய்யம் கட்சி 25702 வாக்குகளும்,  நோட்டா 9234 வாக்குகளும் பெற்றுள்ளன.

தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து,  தூத்துக்குடி மாவட்டஆட்சித்தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சந்திப் நந்தூரி அவருக்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை கனிமொழியிடம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,  தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும், வெற்றிக்காக அயராமல் உழைத்த மாவட்டச் செயலாளார்கள் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திருமிகு. கீதா ஜீவன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும்,  ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த தூத்துக்குடி தொகுதி வாக்காளர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

எனது நினைவுகளில் என்றும் என்னுடன் பயணிக்கும் எனது தந்தையை, தலைவரை இன்று அன்போடு நினைகூர்கிறேன்! அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தமிழகத்தின் குறிப்பாக தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைப்பேன். நன்றி!

இவ்வாறு கூறினார்.