“(சசிகலா) நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார் வைகோ.
கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயந்த்துக்கு…’ நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், வைகோ, பழ.நெடுமாறன், (அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலாவின் கணவர்) சசிகலா நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வைகோ நுாலை வெளியிட நடராஜன் பெற்றுக்கொண்டார்.
பிறகு பேசிய வைகோ, ”தனி ஈழம் என்பதுதான் எனது ஒரே கோரிக்கை. கண்டிப்பாக ஒரு நாள் அது நடந்தேறும்.” என்று முழங்கினார். மேலும், “”இந்த நூலை பெற்றவர் அன்பு சகோதரர் நடராசன் அவர்களுக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
தமிழரின் சுவடுகளே இல்லாமல் இந்திய அரசு ஈழத்தை அழித்ததது. அதை வரலாற்றில் பதிவு செய்ய முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை புலிக்கொடி பறந்த தஞ்சையில் அமைக்க பழ.நெடுமாறனோடு துணை நின்று இடமும் கொடுத்தவர் நடராஜன். அதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.
அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொடியை கையில் ஏந்திக்கொண்டு மாணவத்தலைவனாக நின்ற இந்த நடராஜனை நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
எனது திருமணம் குற்றாலத்தில் நடைபெற்ற போது எனது மூன்று நாட்கள் துணையாக இருந்து உதவி செய்தது இந்த நடராஜன்தான் என்று எத்தனை பேருக்கு தெரியும்?
நான் நன்றியுள்ளவன். நன்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன்” என்ற வைகோ, “நடராஜனை நான் பாராட்டி பேசியதை ஊடகங்கள் திரித்து சொல்லலாம். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஐடோன்ட் கேர்” என்றார் ஆவேசமாக.
நடராஜன் பேசும்போது “நான் அரசியல் பேசப் போவதில்லை. ஆனால், ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்” என்று சுருக்கமாகப் பேசி அமர்ந்தார்ர்.