சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்திப்பு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இரண்டு தொகுதிகள் அதிமுகவுக்கு கிடைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 2ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் 3 பேரும், கூட்டணி கட்சியான மநீமவுக்கு ஒரு தொகுதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திமுக வேட்பாளராக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் ட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றொரு இடத்துக்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது எம்.பி.வழங்கியதற்காக நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின்போது, அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் , முதல்வர் அழைத்ததன் பெயரில் சந்தித்தேன். ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சி யிடம் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளையும், தேவையான தஸ்தாவேஜூகளையும் தயார் செய்து வைக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும் வழங்கினார். முன்அனுபவம் உள்ளவர்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளையும் சொன்னார்கள். கேட்டுக்கொண்டோம்.
எப்போது வேட்புமனு தாக்கல் செய்வது என்பதை அவர்கள் சொல்வார்கள். அதற்கான முன் ஏற்பாடுகளுக்காக தான் இங்கே வந்தோம். நான் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு குரல் கொடுத்து வருகிறேன் மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும்.
பின்னர் செய்தியளரின் கேள்விக்கு பதில் கூறியவர், எந்த மொழி குறித்தும் நான் தவறாக பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன். சிலர் அரசியல் காரணத்திற்காக என்மீது வன்மத்தை கொட்டுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்க மாட்டேன், பதிலும் சொல்ல மாட்டேன் என்றவர், அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், இது ஜனநாயக நாடு. சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான் என்றார்.
அப்போது நிரூபர் ஒருவர், திமுகவுக்கு எதிராகவும், குடும்ப கட்சிக்கு எதிராகவும் பேசி கட்சியை தொடங்கிய நீங்கள், தற்போது திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது ஏன் என்ற கேள்விக்கு கோபமாக பதில் கூறியவர், மக்கள் நீதி மய்யமும், நானும் திமுகவுடன் இருக்க வேண்டியது நாட்டிற்கு தேவை, அதனால் தான் திமுகவுடன் பயணிக்கிறோம் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்.
ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…