தஞ்சாவூர் மாவட்டம்,பாலதள்ளி, அருள்மிகு விஷ்ணு துர்க்கை ஆலயம்

இந்தத் தலத்தில் கையில் சங்கு-சக்கரத்துடன், விஷ்ணு துர்கையாக அருள்பாலிக்கிறாள் அம்மன். துர்கையை ராகு கால வேளையில், தரிசித்து வழிபட, வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும் என்பது ஐதீகம் ! செவ்வாய்-வெள்ளிக்கிழமைகளில், ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சையில் நெய் விளக்கேற்றி வழிபட, எப்பேர்ப்பட்ட துன்பமும் பனிபோல் விலகும். ஆடி மாதம் வந்துவிட்டாலே, துர்கையம்மன் கோயிலில் தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்!

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து, நேர்த்திக்கடனைச் செலுத்தி மகிழ்கின்றனர். சந்தனக்காப்பு அலங்காரத்தில், துர்கையைத் தரிசிக்க, நமது சங்கடங்கள் யாவும் தீரும்.

அதேபோல், ஆடிப்பூர நன்னாளில், அபிஷேக ஆராதனைகள் எல்லாம் அதிகாலையிலேயே துவங்கி விடுமாம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகங்கள் செய்தபடி இருப்பார்கள்.

தடைப்பட்ட திருமணம், குழந்தையின்மை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை, வியாபாரத்தில் நஷ்டம் என கலங்கித் தவிப்பவர்கள், இந்த நாளில் இங்கு வந்து, துர்கைக்கு, பாலபிஷேகமும் சந்தனக்காப்பு அலங்காரமும் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட … மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்;

செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள், அம்மனுக்கு குழந்தையைத் தத்துக் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கே நடைபெறுகிறது. அதேபோல், வெள்ளி மற்றும் கல்லால் ஆன நாகர் விக்கிரகத்தைச் செய்து கோயிலுக்கு வழங்கினால், ராகு-கேது தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

தல வரலாறு:

ஒருகாலத்தில், பால மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது இப்பகுதி. வனத்துக்கு அருகில் இருந்த ஊர்க்காரர்கள், பசுக்களை பாலமர வனத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். ஒருகட்டத்தில், மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களின் மடி பாலின்றி இருந்தன.

இதில் குழம்பிப் போனவர்கள், மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் செல்பவர்களே பாலைக் கறந்துவிடுகிறார்களோ எனச் சந்தேகப்பட்டனர். கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் எனக் கருதி ஊர்மக்கள், ஒருநாள் ரகசியமாகப் பின்தொடர்ந்தனர்.

அப்போது மாடுகள் மேடான ஓரிடத்தில் நின்றுகொண்டு, தாமாகவே பாலைச் சொரிவதைக் கண்டு அதிர்ந்தனர். உடனே அனைவரும் ஒன்றுகூடி, அந்த மேட்டுப் பகுதியைத் தோண்ட, அங்கிருந்து வெளிப்பட்டது அழகிய ஒரு கல் விக்கிரகம். வியப்பில் ஆழ்ந்து போனவர்கள், விக்கிரகத்தை வெளியே எடுப்பதற்கு முயன்றனர். ஆனால், முடியவில்லை.

இன்னும் ஆழமாகத் தோண்டிப் பார்த்தபோது, அந்த விக்கிரகத்தின் பீடமும், அதையடுத்து சயனித்த நிலையில் உள்ள துர்கையின் விக்கிரகமும் இருந்ததாம் (துர்கையின் பீடத்துக்குக் கீழே, சயன நிலையில் உள்ள துர்கையின் திருவிக்கிரகமேனி இருப்பதாகச் சொல்வர்).

அதே நேரம், இந்தப் பகுதியை வளப்படுத்தவே வந்துள்ளேன். நின்ற நிலையில் என்னைப் பிரதிஷ்டை செய்யுங்கள். இந்த ஊர்மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெறுவார்கள் என்று அசரீரி கேட்டதாம் ! இதில் நெகிழ்ந்து மகிழ்ந்தவர்கள், அந்த இடத்திலேயே துர்கைக்கு அழகிய கோயிலைக் கட்டி, வழிபடத் துவங்கினர்.

சிறப்பம்சம்:

இங்குள்ள மூலவர் சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கையாக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.

அமைவிடம்:

பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் உள்ளது பாலதள்ளி எனும் கிராமம்.

திருவிழா:

ஆடிசெவ்வாய், ஆடி வெள்ளி

தல சிறப்பு:

இங்குள்ள மூலவர் சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கையாக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.

பிரார்த்தனை:

வாழ்வில் நிம்மதியும், சந்தோஷமும் பெருக, மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, செல்வ வளம் பெருக, குடும்ப ஒற்றுமை, குழந்தைபாக்கியம் என பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து எலுமிச்சை மாலை சாற்றியும், சந்தனக்காப்பு சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.