தஞ்சாவூர்:
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடைபெற்றது.
இதன் காரணமாக கதிராமங்கலத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்த்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தை இன்றும் தொடர்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கதிராமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளை நிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றுமாறு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சியரை சம்பவ இடத்துக்கு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆட்சியர் வராமல் தஞ்சை எஸ்.பி. வந்ததார். அவரை வரவிடாமல் தடுக்க பொதுமக்கள் ரோட்டில் குப்பையை போட்டு எரித்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து பிரச்சினை பூதாகாரமானது. போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடைபெற்றது.
இதுகுறித்து பேசிய பொதுமக்கள், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ண எடுப்பதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள விலைநிலங்கள் மட்டுமின்றி குடிநீரும் மாசு பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால், எங்களால் குடிநீரை குடிக்கமுடியவில்லை. இதன் காரணமாக குடிக்ககூட தண்ணீர் இன்றி கஷ்டப்படுகிறோம். ஆகவே, ஓஎன்ஜிசி எரிகுழாயை அகற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எண்ணெய் இல்லாமல் வாழ்ந்துவிடலாம், ஆனால் குடிநீர் இல்லாமல் எப்படி வாழமுடியும் நினைத்து பாருங்கள். ஏற்கனவே குடிநீரை எடுத்து சென்று பரிசோதனை செய்வதாக கூறினர், ஆனால் அறிக்கை வழங்கப்படவில்லை, எங்களுக்கு எங்கள் ஊரை சுற்றி உள்ள 7 ஓஎன்ஜிசி கிணறுகளையும் மூட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
இந்த எண்ணெய் கசிவு 2 ஏக்கர் அளவில் விளை நிலத்தில் பரவி உள்ளதாகவும், இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, கதிராமங்கலத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, ஓஎன்ஜிசி குழாய் உடைப்பால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஆட்சியர் அண்ணாதுரை கூறி உள்ளார்.