தஞ்சாவூர்:

ருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் (அ)தஞ்சை பெரிய கோவில் (அ)பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் (பிப்ரவரி 5ந்தேதி) நடைபெற உள்ளது.

இதன் காரணமாக கோவில் முழுவதும் வர்ணங்கள் பூசப்பட்டு, கோவில் கலசமும் மாற்றப்பட்டு உள்ளது. பார்ப்போரை சுண்டி இழுக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டு கோவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள 338 சாமிகளுக்கும் அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி மற்றும் 13 அடி உயர பெருவுடையாருக்கு  கடந்த ஜனவரி  மாதம் 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது  அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்தின் பூர்வாங்க பூஜைகள் கடந்த 27ம் தேதி தொடங்கிய நிலையில்  1ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள்  தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்காக யாகசாலைகள் பிரம்மாண்டமாக வர்ணங்கள் பூசப்பட்டு  அலங்கரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக கும்பாபிஷேகத்திற்கு தேவையான புனித நீர் மற்றும்  யாகசாலை பூஜைக்காக புனித நீர் திருவையாறு காவிரி ஆற்றில் இருந்து கலசத்தில்எடுத்து வரப்பட்டு வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு பின்னர் சிறப்பு பூஜை

செய்யப்பட்டு,  யானையின் மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக பெரிய கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதை யடுத்து யானை மீது வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதிக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். இதேபோல் கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்பட்டு பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த புனிதநீர் அனைத்தும் கலக்கப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த புனித நீர் கலசங்களுக்கு நேற்று கலை முதல் பூஜைகள் தொடங்கி உள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3ஆம் கால யாகசாலை பூஜையும், 3ஆம் தேதி காலை 9 மணிக்கு 4ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 5ஆம் கால யாகசாலை பூஜையும், 4ஆம் தேதி காலை 8 மணிக்கு 6ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7ஆம் கால யாகசாலை பூஜையும் .நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம் நடைபெறும் 5ந்தேதிகாலை 4.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜையும்  அதனைத் தொடர்ந்து காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

காலை 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

யாக சாலை பூஜைக்காக 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூஜைகள் சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக  300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

யாகசாலை பூஜைகள் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

பிரமிப்பூட்டும் புகைப்படங்கள் கொண்ட எழில்மிகு வீடியோ…