நெல்லை: தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் சென்றுள்ளார். அங்கு அரசு பணிகள் குறித்து எம்எல்எக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மண்டல அளவிலான 10 மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நிதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பச்சையாற்றின் குறுக்கே தமிழாகுறிச்சி என்ற இடத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பு அணையை, பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார் தொடர்ந்து நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை பொன்னாக்குடி பகுதியில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த  நகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைச் தலைவர் அப்பாவு , முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ,அரசு அதிகாரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் துரைமுருகன்,  கடந்த 10 வருடம் எந்த அதிகாரிகளும் வேலை செய்யவில்லை. அனைவருக்கும் பல வேலைகள் மறந்துவிட்டது. திமுக அமைச்சரவை பதவியை ஏற்ற பின்னர் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே, பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்த நதிநீர் இணைப்புத் திட்டபணி, நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்டது.  நான் ஆரம்பித்ததை நானே திறக்கவேண்டும் என விட்டு விட்டார்கள் எனக் கூறினார்.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது என்று கூறியவர்,  நதி நீர் இணைப்பு திட்டம் முதல் இரண்டு பகுதிகள் 100% முடிந்துள்ளது. 3 ம் பகுதி 99% பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. 4 ம் பகுதி 58% பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் முழுமையாக மார்ச் 2023 ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.