சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி ஏற்பாடுகளில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முர மாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில், ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பல கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடும் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில், ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சியும் இணையும் என எதிர்பார்த்த நிலையில், தங்களது அணிக்கு தொகுதி ஒதுக்காததால், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த, அதிமுக சின்னத்தில் ஜெயித்து எம்எல்ஏவா உள்ள, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமும் அன்சாரி, அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிமும் அன்சாரி ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர். இவருக்கும் ஜவாஹிருல்லாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தனிக்கட்சி தொடங்கினார். அவரை அரவணைத்த ஜெயலலிதா, தனது கூட்டணியில் இணைந்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்கினார்.
தற்போது தமிமும் அன்சாரி திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஜவாஹிருல்லா கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று திமுக அணியினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வராத நிலையில், இதுகுறித்து, இன்று மாலை செயற்குழு கூடி முடிவு செய்யப்படும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் திமுக கூட்டணியில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்வதாக தகவல்கள் பரவி வருகிறது.