சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநராக சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், 2026 ஜனவரி 3ஆம் தேதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரில் “Every family has a hero” (ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாயகன் இருப்பான்) என்ற வரி இடம் பெற்றுள்ளது.

இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

முன்னதாக இந்தப் படத்தை இயக்க இருந்த சுந்தர்.சி, சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்திலிருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் இயக்குநராக அறிவிக்கப்பட்ட சுந்தர்.சி, “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் பணியாற்றுவது என் கனவு. ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் கனவுகளை விட சூழ்நிலைகள் பெரியதாகிவிடும். அவர்களை நான் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் நினைப்பேன்” என்று கூறியிருந்தார்.

46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இந்தப் படத்தின் அறிவிப்பை 2025 NEXA SIIMA விருதுகள் விழாவில் கமல்ஹாசன் உறுதிப்படுத்தினார்.

‘டான்’ (2022) படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, நீண்ட காலமாக ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ரசிகனாக இருந்த சிபியின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியிடம் ஒரு கதையை சொல்லியதாகவும், அது தற்போது உருவாகும் கதையா அல்லது புதிய கதையா என்பது இன்னும் தெரியவில்லை.

‘தலைவர் 173’ படம் 2027 பொங்கல் பண்டிகையையொட்டி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது :

“ஒரு சிறிய நகரத்தில் பிறந்த ஒரு சிறுவனுக்கு, தன் விருப்பமான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே பெரிய கனவாக இருந்தது.
அந்த கனவு ஒருநாள் நனவானது.

அதைவிட பெரிய கனவு – என் சூப்பர் ஸ்டாரை இயக்க வேண்டும் என்பதுதான். அதற்கும் நான் மிக அருகில் சென்றேன்… ஆனால் அது கைகூடவில்லை.

‘ஒருநாள் நடக்கும்’ என்ற நம்பிக்கையை விடாமல் இருந்தேன்.
இன்று அந்த நாள் வந்துவிட்டது.

தலைவர் 173 நாள். ‘கனவுகள் நனவாகும்… அற்புதங்கள் நடக்கும்’ என்று தலைவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

இன்று என் வாழ்க்கை கனவுகளை விடவும் பெரியதாக மாறியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் சார், மகேந்திரன் சார் தயாரிப்பில் பணியாற்றுவது பெருமை.

ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், மகேந்திரன் சார் – நம்பிக்கைக்கு எப்போதும் நன்றி.

அந்த நம்பிக்கையை காக்க என் முழு மனமும் உழைப்பும் கொடுப்பேன்.

டிஸ்னிக்கு நன்றி.

என் அன்பான அனிருத் சாருடன் மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி.” என்று அந்த பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]