பாங்காக்
சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களை தங்கள் நாட்டுப்பக்கம் ஈர்க்க தாய்லாந்து 50% வரிவிலக்கு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆன வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனப் பொருட்களுக்கு அதிக அளவில் இறக்குமதி வரியை அமெரிக்கா விதிக்கிறது. சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. இந்த நிலையால் உலகப் பொருளாதாரம் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. பல சர்வதேச நிறுவனங்கள் குறைந்த உற்பத்திச் செலவு மற்றும் ஊதியம் காரணமாக சீனாவில் தங்கல் தொழில்களை நடத்தி வந்தன.
இந்த நிலையில் 48 சர்வதேச நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வேறு தெற்காசிய நாடுகளில் தங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளன. இதனால் பல தெற்காசிய நாடுகள் இந்த தொழிலதிபர்களை தங்கள் நாட்டுக்கு இழுக்க முயற்சி செய்து வருகின்றன. அதில் தாய்லாந்து முன்னிலையில் உள்ளது.
அந்நாட்டில் சுமார் 10 சர்வதேச நிறுவனங்கள் சீனாவிலிருந்து தொழிலை மாற்றி அமைக்க உள்ளதாகத் தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும் இவ்வாறு வரும் தொழிலதிபர்கள் தாய்லாந்து நாணயத்தில் 10 லட்சத்துக்கு மேல் வருடத்துக்கு வர்த்தகம் செய்வோருக்குத் தொடர்ந்து தொழில் நடத்த அனுமதி அளிக்க உள்ளது மேலும் அத்தகைய தொழிலதிபர்களுக்கு 5 வருடங்களுக்கு 50% வரி விலக்கு அளிக்க உள்ளது.
இது குறித்து தாய்லாந்து பிரதமர் அலுவலக தலைமை அதிகாரி கோப்சக், “இந்த புதிய திட்டத்தின் கீழ் ஆசியாவுக்குப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் அமைக்க விரும்பும் சூழல் உண்டாகி இருக்கிறது. குறிப்பாகத் தொழில் நுட்ப நிறுவனங்கள் பல தாய்லாந்தில் தங்கள் தொழில்களைத் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. அத்துடன் தொழிற்சாலைக் கட்டமைப்பு செலவு, ஊழியர் பயிற்சிச் செலவுகளுக்கான வரிகளுக்கும் சலுகை அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.