விருதுநகர்: தை மாத பிரதோசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இது வனத்துறை பகுதியில் அமைந்துள்ளதால், முக்கிய நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் மழை நேரங்களில் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தை மாத பிரதோஷம், பவுர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு இன்று முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும், மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகத்தில் இரவு நேரத்தில் கோவிலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.