டில்லி
நிஜாமுதினில் நடந்த் தப்லிகி ஜமாத் அமைப்பின் 9000 உறுப்பினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக டில்லியில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் மொத்தம் 9000 பேர் கலந்துக்க் கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 1306 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். இதுவரை இந்த அமைப்பின் 9000 பேரும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் புண்ணியா ஸ்ரீவத்சா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ”டில்லி நிஜாமுதின் மசூதியில் 250 வெளிநாட்டினர் உள்ளிட்ட சுமார் 2500 பேர் இருந்தனர். இதில் 1804 பேர் தனிமை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தவிர 302 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பின் உறுப்பினர்களைக் கண்டு பிடிக்க உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசுகள் உதவின” எனத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சகத்தின் மற்றொரு இணை செயலாளர் லவ் அகர்வால், “டில்லிக்கு வந்து சென்றவர்களில் 400 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் சோதனை முடிவுகள் முழுமையாக வரவில்லை. எனவே இது மேலும் அதிகரிக்கலாம். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 173 பேர், ராஜஸ்தானில்11 பேர், அந்தமானில் 9 பேர், டில்லியில் 47 பேர், தெலுங்கானாவில் 33 பேர், ஆந்திராவில் 67 பேர், அசாமில் 11 பேர், ஜம்மு காஷ்மீரில் 22 பேர், புதுச்சேரியில் இருவர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோதனை முடிவுகள் வந்த பிறகு இறுதி எண்ணிக்கை தெரிய வரும” எனத் தெரிவித்துள்ளார்.