சென்னை: உடல்நலக்குறைவால் காலமான கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு புதுச்சேரி பொறுப்பு துனைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை
‘முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
துணைமுதல்வர் ஓபிஎஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தா.பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மு.க.ஸ்டாலின், பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் தா.பாண்டியன், கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது உடலுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக ஸ்டாலின் கூறினார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர், விஜயகாந்த்
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாமக தலைவர் ராமதாஸ்
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றிய வர். கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். தா. பாண்டியன் அவர்களை இழந்து வாடும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன்
தா.பாண்டியன் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும் என்று இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தா பாண்டியன், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களைஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முகஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர். அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர் என்று டி.டி.வி. புகழாரம் சூட்டியுள்ளார்.
விசிக திருமாவளவன்
தா.பாண்டியனின் மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
பொதுவுடைமை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய மாபெரும் போராளி தா.பாண்டியனின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மறுக்க முடியாத, மறக்க முடியாத மாபெரும் தலைவராக விளங்கியவர் தா.பாண்டியன். தனது நீண்ட நெடிய வாழ்நாள் பயணத்தில் தமிழக மக்களுக்குச் சேவையாற்றுவதிலேயே கழித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமரசமின்றி சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி தா.பாண்டியன். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும், அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. தா.பாண்டியனின் ஆழமான கருத்துகள், அறிவுசார்ந்த பேச்சுகள் இனிமேல் கேட்காது என்பதை நினைக்கும்போது என் மனது வலிக்கிறது. அவரது மறைவுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ்ட் வேறொன்று வீழ்ந்திருக்கிறது பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது, சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.ர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
65 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் உழைத்திட்ட தலைவர் தா.பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இலக்கிய மன்றங்களை அலங்கரித்தவர் எனப் பலதுறை வித்தகராக விளங்கியவர்.
தா.பாண்டியன் மறைவு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.